ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் டிவைடர் இடையே வேண்டும் பாதை பொதுமக்கள் கோரிக்கை

ஒட்டன்சத்திரம், பிப். 25: ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் அமைக்கப்படும் டிவைடர் இடையே பாதை விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் தற்போது சாலை விரிவாக்கம், பாதாள சாக்கடை, டிவைடர் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் மெயின்ரோட்டில் அரசு மருத்துவமனை, அரசு கால்நடை மருத்துவமனை ஏபிபி நகர் செல்லும் சாலைக்கு டிவைடரின் இடையில் பாதை இல்லாததால் சுமார் 500 மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஏபிபி நகர் வழி குறிஞ்சிநகர், பழநி கவுண்டன்புதூர் மற்றும் அருகிலுள்ள குக்கிராமங்களுக்கு செல்லும் வழித்தடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர இவ்வழியே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தினமும் மாணவிகள் சென்று வருகின்றனர். டிவைடரின் இடையில் பாதை இல்லாமல் இருப்பதால் மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் அவரச காலத்தில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் அரசு மருத்துவமனைக்கு செல்வதில் பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே தாராபுரம் சாலை அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்படும் டிவைடரின் இடையே வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: