ஒரு வீட்டில் 3 குடும்பம் உறங்க கூட இடமில்லை ரெட்டியார்சத்திரம் மக்கள் புலம்பல்

திண்டுக்கல், பிப். 25: ரெட்டியார்சத்திரம் பகுதி ஆதிதிராவிடர் காலனியில் ஒரு வீட்டில் 3 குடும்பங்கள் வரை வசித்து வருவதாகவும், இதனால் உறங்க கூட இடமில்லாமல் வீதியில் படுத்து வருவதாகவும், எனவே இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் எனக்கூறி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் ஏராளமானோர் வந்தனர். பின்னர் அவர்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘ரெட்டியார்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆதிதிராவிடர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

ஏற்கனவே கொடுத்த காலனி வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு மற்றும் மூன்று குடும்பங்கள் சேர்ந்து இருப்பதால் வசிப்பதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவுநேரங்களில் வீதிகளில் உறங்க வேண்டிய நிலை உள்ளது.

மழைக்காலங்களில் விஷ பாம்பு, பூரான் ஆகியவை வருவதால் எங்களுக்கு உறங்க மற்றும் நடமாட இடையூறாக உள்ளது. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories: