×

ராஜபாளையம் அருகே சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றால் பொதுமக்கள் அச்சம் சாலையில் ஓடும் கழிவுநீரால் நோய் அபாயம்

ராஜபாளையம், பிப்.25: ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தை அடுத்த வாகைக்குளம்பட்டி அருகே உள்ளது முருகன்பதி தெரு. மேலராஜகுலராமன் ஊராட்சிக்குட்பட்ட இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி சுற்றிலும் கண்மாய் பகுதி, விவசாய நிலங்கள் அதிகமிருப்பதால் பல்வேறு பகுதியில் இருந்து வரும் தெருநாய்கள் தொல்லை அதிகமிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.  அத்துடன் குடியிருப்பின் பல பகுதிகளுக்கு முறையான வாறுகால் வசதியில்லாததால் கழிவுநீர் வீடுகளுக்கு மத்தியில் செல்கிறது. பள்ளங்களில் தேங்கும் கழிவுநீரில் உருவாகும் கொசுக்களால் பல்வேறு தொல்லைக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். வீடுகளுக்கு மத்தியில் உள்ள சுவர் இல்லாத திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். மற்ற பகுதிகளில் இருந்து வரும் பன்றிகள் வீடுகள் அருகே உலா வருவதால் நோய் தொற்றுநோய் அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த புதியராஜ் கூறுகையில், `` இப்பகுதியில் வீடுகள் பெருகி பல ஆண்டுகளைக் கடந்தும் முறையான வாறுகால் வசதி ஏற்படுத்தப்படவில்லை. வேறு வழியின்றி வீட்டின் முன்புறம் நாங்களே கழிவுநீர் செல்ல வாறுகால் ஏற்படுத்தி வெளியேற்றி வருகிறோம். இதனால் வாகனங்கள் செல்வதில் சிக்கலும் கழிவுநீர் தேக்கத்தால் கொசுத்தொல்லைக்கும் ஆளாகி வருகிறோம். குடியிருப்புகளுக்கு இடையே திறந்த வெளிக்கிணறு எந்த வித உபயோகமின்றி உள்ளது. இதில் சுவர் இல்லாததால் குழந்தைகள் விளையாட செல்ல விடுவதில்லை. பல்வேறு தரப்பினரும் இதில் கழிவுகளை குவித்து வருவதால் பிளாஸ்டிக் கழிவுகளுடன் துர்நாற்ற பிரச்னையும் ஏற்பட்டுள்ளது.

இந்த கிணற்றிற்கு முறையான தடுப்பு ஏற்படுத்துவதோடு கழிவுகளை வெளியேற்றி சுத்தப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் அமைந்துள்ள மகளிருக்கான சுகாதார வளாகம் போதுமானதான இல்லை. அத்துடன் இதை பராமரிப்பதற்கு முறையான ஆட்கள் நியமிக்காததால் பயன்படுத்துவோர் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். பல்வேறு தரப்பினரும் உபயோகிக்கும் இவ்வளாகத்தை சுத்தப்படுத்த ஊழியர்கள் நியமித்து தர வேண்டும். மேலும் சிதிலமடைந்து உள்ள கதவுகள் சரி செய்ய மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி மன்றத்தினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Rajapalayam ,road ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...