விலைவாசி உயர்வுக்கு மோடி அரசே காரணம்

புதுச்சேரி, பிப். 25: விலைவாசி உயர்வுக்கு மோடி தலைமையிலான மத்திய அரசே காரணம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், புதுச்சேரியில் பணத்திற்கு பதில் இலவச அரிசி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மகிளா காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், விஜயவேணி எம்எல்ஏ மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராகவும், கவர்னர் கிரண்பேடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது சமையல் கியாஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து சமையல் எரிவாயு விலையை உயர்த்தி அடித்தட்டு மக்களை சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பெட்ரோல் விலை, சமையல் எரிவாயு விலையை உயர்த்தும்போது வீதியில் இறங்கி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் ரூ.160 டாலர் என இருந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.52க்கும் விற்கப்பட்டது. இன்று கச்சா எண்ணெய் ஒரு பேரல் 60 டாலருக்கு கிடைக்கிறது. ஆனால் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.68க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் விலைவாசி குறைந்திருக்க வேண்டும். குறிப்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைத்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு விலையை அதிகரித்த காரணத்தால் அரசுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி லாபம் கிடைக்கிறது. மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை மத்திய அரசு சூறையாடி கொள்ளையடித்து மக்கள் வயிற்றில் அடித்து வருகிறது. பாஜக ஆட்சியில் சாதாரண மக்கள் தாக்கப்படுகிறார்கள். விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுதான் காரணம் என சிலர் நினைப்பார்கள். ஆனால் இது எல்லாவற்றுக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசே காரணம். இதை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: