×

அரசு சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் - மறியல்

புதுச்சேரி,  பிப். 25: புதுச்சேரியில் கட்டண உயர்வை கண்டித்து தொடர் போராட்டத்தில்  குதித்துள்ள பல்கலை. மாணவர்களுக்கு ஆதரவாக அரசு சட்டக்கல்லூரி மற்றும்  கலைக்கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு மறியலில் ஈடுபட்டனர். மேலும்  போராட்டத்தை தீவிரப்படுத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.புதுச்சேரி பல்கலைக்கழக கட்டண உயர்வுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து 19 நாட்களாக அவர்கள் போராட்டங்களில்  ஈடுபட்டனர். இருப்பினும் கட்டணத்தை குறைக்க வழியில்லை என பல்கலை. நிர்வாகம்  கைவிரித்து விட்டது. இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக  சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அண்ணா  சிலையிலிருந்து பேரணியாக புறப்பட்டு நேருவீதி சந்திப்பில் திடீரென சாலை  மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்  பங்கேற்ற மாணவர்கள், பல்கலை. கட்டண உயர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படவே தகவல் கிடைத்து வந்த  பெரியகடை எஸ்ஐ முத்துகுமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட  சட்டக்கல்லூரி மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோரை கைது செய்து அங்கிருந்து  அப்புறப்படுத்தினர். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு நிலவியது.மேலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக லாஸ்பேட்டை தாகூர் அரசு  கலைக்கல்லூரி, சமுதாயக் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி  மற்றும் தவளகுப்பம் ராஜீவ்காந்தி கலை அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று  ஸ்டிரைக்கில் குதித்தனர். அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி  வளாகத்தில் திரண்டு பல்கலை.க்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது கட்டண  உயர்வை உடனடியாக அதன் நிர்வாகம் திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர்.

Tags : Government Law College ,Arts College Students Strike ,
× RELATED சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம்...