அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பறிமுதல்

விழுப்புரம், பிப். 25:  விழுப்புரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் நம் சுற்றுச்சூழலைச் சேதப்படுத்துவதோடு மனித இனத்திற்கும், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினமான 2018 ஜூன் 5 அன்று தமிழக முதல்வரால் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிமுதல் தடிமன் பாகுபாடின்றி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடைசெய்வதற்கு அறிவிக்கப்பட்டு, அதனடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து இதனை கண்காணிக்கவும், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்தால் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. நிறுவனங்களுக்கு முதல்முறையாக ரூ.25 ஆயிரம், 2ம் முறை பயன்படுத்தினால் ரூ.50 ஆயிரம், மூன்றாம் முறை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம்வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் முதல் முறை ரூ.10 ஆயிரமும், 2ம் முறை ரூ.20 ஆயிரமும், 3ம் முறை ரூ.25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இருப்பினும் ஒரு சில இடங்களில், தடையை மீறி இந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடந்து வருகின்றன. குறிப்பாக மாவட்ட தலைநகராக உள்ள விழுப்புரத்தில் மொத்தமாகவும், சில்லரைகளிலும் இந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடந்து வருகின்றன. நகராட்சி அதிகாரிகள், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்பட்ட நிலையிலும் முற்றிலும் ஒழிந்தபாடில்லை. இதனிடையே, எம்ஜி ரோட்டில் உள்ள ரெட்டியார் பஜாரில் மொத்தமாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக நகராட்சி அதிகாரிகளுக்கு வந்த தகவலின்பேரில், ஆணையர் தட்சிணாமூர்த்தி உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர்கள் அந்த குடோனிற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் நகரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பதை தினசரி ஆய்வு செய்து வருகின்றோம். ஆய்வில் கண்டறிந்தால் அபராதம் விதிக்கப்படும். எனவே வணிகர்கள் இதனை தவிர்க்க வேண்டுமென எச்சரித்துள்ளனர்.

Related Stories: