×

ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு இலவச உடற் தகுதி பயிற்சி முகாம் வரும் 2ம் தேதி முதல் நடைபெறுகிறது

திருவண்ணாமலை, பிப்.25: திருவண்ணாமலையில் நடைபெறும் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு உடற்தகுதி பயிற்சி முகாமை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம் சார்பில், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி திறந்தவெளி மைதானத்தில், ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் ஏப்ரல் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.அதில், சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் நர்சிங் உதவியாளர் கால்நடை, சிப்பாய் எழுத்தர் மற்றும் ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம், சிப்பாய் பொது பணி, சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணிகளுக்கு தகுதி வாய்ந்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, பதினேழரை முதல் 23 வயது வரையுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம்ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் வரும் மார்ச் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே முகாமில் பங்கேற்க முடியும்.

இந்த முகாமில், 1.6 கி.மீ. தூரம் ஒட்டம், 9 அடி கால்வாய் தாவுதல், புல் அப், ஜிக் ஜாக் பேலன்ஸ் ஆகிய உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படும். உடல் தகுதித் தேர்வில் தகுதி பெறும் இளைஞர்கள் மட்டும், அடுத்தடுத்த தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அதிக எண்ணிக்கையில் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக, சிறப்பு பயிற்சி முகாமை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள், வரும் மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெறும் உடற்தகுதி சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி 04175-233047 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Free Physical Training Camp ,youths ,Army Recruitment Camp ,
× RELATED 300 அடி பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி: ட்ரோன் உதவியுடன் மீட்பு