×

மார்த்தாண்டம் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 183 பவுன் நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

மார்த்தாண்டம், பிப்.25: மார்த்தாண்டத்தில் கொள்ளையனிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை பாதிக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளரிடம் நீதிபதி ஜெய்சங்கர் ஒப்படைத்தார். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் விரிகோடு பகுதியை சேர்ந்தவர் பொன் விஜய் (40). மார்த்தாண்டம் பஸ் நிலையம் எதிரில் நகை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 27ம் தேதி இரவு இவரது வீட்டில் புகுந்த கொள்ளையன் பூஜை அறையில் வைத்திருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தான். பின்னர் அங்கிருந்த நகைக்கடை சாவியை எடுத்து சென்று பஸ் நிலையம் அருகே உள்ள நகைக்கடையை திறந்து 140 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றார்.இந்த சம்பவத்துக்கு சில தினங்களுக்கு முன் மார்த்தாண்டம் மெயின் ரோட்டில் கிறிஸ்டோபர் என்பவர் நடத்தி வரும் நகைக்கடையில் 70 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. ஹெல்மெட் அணிந்தபடி நள்ளிரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த தங்க நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்றார். அடுத்தடுத்த நடந்த ெகாள்ளை சம்பவங்களை தொடர்ந்து எஸ்பி நாத் உத்தரவின்பேரில், தக்கலை டிஎஸ்பி ராமச்சந்தின் மேற்பார்வையில், எஸ்ஐக்கள் சிவசங்கர், சுந்தரலிங்கம், அருளப்பன், ரகுபாலாஜி, விஜயன் உள்பட 6 பேர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தீவிர விசாரணை நடத்திய தனிப்படையினர் கொள்ளை சம்பவம் தொடர்பாக எஸ்டி.மங்காடு பகுதியை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி எட்வின் ஜோஸ் (29) என்பவரை கைது செய்தனர். இவர் மீது நகைக்கடைகள், வீடுகளில் கொள்ளையடித்தது தொடர்பாக 25 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவரிடமிருந்து மொத்தம் 337 பவுன் நகைகளை மீட்டனர்.கொள்ளையடிக்கும் நகைகளை எட்வின் ஜோஸ் கோட்டகம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்ற பழைய நகை வாங்கி விற்கும் வியாபாரியிடம் கொடுத்து விற்று பணமாக்கி வந்துள்ளார். இதையடுத்து ரமேஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை இருதினங்களுக்கு முன் போலீசார் கைது செய்து 80 பவுன் நகைகளை மீட்டனர். மீட்கப்பட்ட நகைகளை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் குழித்துறை குற்றவியல் நடுவர் மன்றம் 1ல் நீதிபதி ஜெய்சங்கரிடம் ஒப்படைத்தர். நகைகளை ஆய்வு செய்த நீதிபதி ஜெய்சங்கர், பாதிக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர் பொன்விஜயிடம் 183 பவுன் நகைகளை ஒப்படைத்தார். மேலும் அவருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

Tags : jewelery ,owner ,jewelery robbery ,Marthandam ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!