×

பொன். ராதாகிருஷ்ணனின் முயற்சி கிடப்பில் கிடக்கிறது குமரி மருத்துவக்கல்லூரியை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும் மத்திய அரசின் பிரதிநிதியிடம் டாக்டர்கள் கோரிக்கை

நாகர்கோவில், பிப்.25:  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசின் பிரதிநிதியாக வந்தவரிடம், டாக்டர்கள் கோரிக்கை வைத்தனர்.
மத்திய அரசின் தூய்மை பாரத திட்டம், கல்வி மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஆலோசனை பிரதிநிதியாக இருப்பவரும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவருமான ராமசாமி, நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு வந்தார். அவருடன் சசிகலா புஷ்பா எம்.பி.யும்  வந்திருந்தார். மருத்துவக்கல்லூரி கூட்ட அரங்கில் அவர்கள் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர்.மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர் டாக்டர் ஆறுமுக வேலன், உதவி உறைவிட மருத்துவர்கள் ரெனிமோள்,  விஜயலெட்சுமி, மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் டாக்டர் லியோ டேவிட் மற்றும் பல்வேறு துறை டாக்டர்கள் கலந்து கொண்டனர். பா.ஜ. பிரதிநிதிகளாக முன்னாள் நகர் மன்ற தலைவர் மீனாதேவ், உமாரதி, அஜித்குமார், சுனில் அரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ராமசாமி, மத்திய அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இந்த மாவட்டத்துக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் மருத்துவக்கல்லூரிக்கு வந்து பாருங்கள் என என்னிடம் கூறி இருந்தார். அதன் அடிப்படையில் மருத்துவக்கல்லூரிக்கு வந்து உள்ளேன். மிக சிறப்பாக டாக்டர்கள் செயல்படுவதை காண முடிகிறது. அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசின் சார்பில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் இருந்தால் நிச்சயம் அதை, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றி தருவேன் என்றார். அப்போது டீன் சுகந்தி ராஜகுமாரி, இந்த மருத்துவக்கல்லூரிக்கு  300 படுக்கை வசதிகள் கொண்ட கூடுதல் கட்டிடம் தேவைப்படுகிறது. கேன்சர் பிரிவுக்கு கட்டிடம் வேண்டும். ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இதனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் இப்போது மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது. அதற்கான பைல்களை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இங்கு ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள். 800 பேர் உள் நோயாளிகளாக உள்ளனர். போதிய இட வசதி  இல்லை. பல்வேறு சிறப்பு சிகிச்சை துறைகள் உள்ளன. அவற்றை செயல்படுத்தும் வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது அங்கிருந்த மற்ற டாக்டர்களும் இதை வலியுறுத்தினர்.



Tags : Radhakrishnan ,specialty hospital ,Kumari Medical College ,
× RELATED சொத்து, தொழில் வரி வசூல் மையங்கள் 29...