காரப்பேட்டை - வாலாஜாபேட்டை சாலையில் விபத்து நடந்தால் தேசிய நெடுஞ்சாலை ஆணையமே பொறுப்பு: உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: காரப்பேட்டை - வாலாஜாபேட்டை சாலையில் விபத்து ஏற்பட்டால் அதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்வும் சென்னை உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை தாம்பரம் - திண்டிவனம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய  உரிமம் கடந்த நவம்பர் 8ம்  தேதியுடன் காலாவதி ஆனது.  இதனால், இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனக்கோரி திருச்சியை சேர்ந்த ஜோசப் சகாயராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2002ம் ஆண்டு பரனூர், ஆத்தூர் சுங்கசாவடிகளை, ₹564 கோடி முதலீட்டில் தொடங்கிய தனியார் நிறுவனம், இதுவரை ஆயிரத்து 114 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.  இந்த  வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நவம்பர் 8ம் தேதி விசாரணைக்கு வந்தது.

  அப்போது, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், ஒப்பந்த காலம் முடிந்து விட்டால் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது,  என்று கூற முடியாது. மாறாக, விதிகளின்படி 40 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.   அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. குறிப்பாக, மதுரவாயல் - வாலாஜாபேட்டை சாலை மிக மோசமாக உள்ளது என்றனர். இதைக்கேட்ட மத்திய அரசு வக்கீல் இதுகுறித்து அறிக்கை  தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள்,  காரப்பேட்டையில் இருந்து வாலாஜாபேட்டை வரை 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பராமரிக்கும் பணியை 2019 நவம்பரில் முடிக்க  திட்டமிடப்பட்டதாகவும், ஆனால், ஒப்பந்ததாரர் பணியை குறித்த காலத்தில் முடிக்கவில்லை என்றும் இந்த பணிகள் 2020 ஜனவரி 31க்குள் முடிந்துவிடும் என்றும் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

 இவ்வளவு காலதாமதத்திற்கான காரணம் என்ன என்று அவரிடம் கேட்டபோது, பல்வேறு தரப்பிலிருந்து இந்த பணிகளுக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தமிழக அரசு உரிய அனுமதியை வழங்குமாறு இந்த நீதிமன்றம்  உத்தரவிட்டால் குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடித்துவிடும் என்று கூறினார். எனவே, இந்த வழக்கில் தமிழக தலைமை செயலாளரையும் சேர்த்து இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இந்த சாலையின் மோசமான நிலையால் ஏதாவது விபத்து ஏற்பட்டால் அதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் பொறுப்பேற்க  வேண்டும். விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் இழப்பீடு தரவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: