×

கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள குப்பை குவியலில் தீவிபத்து: மூச்சு திணறலால் மக்கள் அவதி

திருவொற்றியூர்,: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், கத்திவாக்கம் பகுதிகளில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் குப்பையை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், அந்தந்த வார்டுகளில் உள்ள தரம் பிரிக்கும் மையத்திற்கு கொண்டுவந்து மக்கும், மக்காத குப்பை என பிரித்து வருகின்றனர். இந்தநிலையில், எண்ணூர் அனல் மின் நிலைய குடியிருப்புக்கு அருகே, கத்திவாக்கம் நெடுஞ்சாலை ஓரம் மக்காத குப்பை மற்றும் டயர் போன்றவை மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த குப்பையை நேற்று காலை மர்ம நபர்கள் தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது. காற்றில் தீ கொழுந்து விட்டு எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

இதனால் அந்த வழியாக மாநகர பேருந்தில் பயணித்தவர்கள், வாகன ஓட்டிகள், எண்ணூர் அனல் மின் நிலைய குடியிருப்பில் வசிப்பவர்கள் மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சலால் அவதிப்பட்டனர். மேலும், கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து எண்ணூர் அனல் மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். குடியிருப்பு பகுதிகளில் சேகரித்த குப்பை கழிவுகளை தரம் பிரிக்கும் மையத்துக்கு எடுத்துச் செல்லாமல் துப்புரவு பணியாளர்களே தீயிட்டுக் கொளுத்தினார்களா அல்லது மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED கறம்பக்குடி ராட்டின குளத்தில்...