×

ராயபுரத்தில் செயல்பட்டு வரும் ரயில்வே அச்சகத்தை மூடும் முடிவு ஒத்திவைப்பு

சென்னை,: ராயபுரத்தில் செயல்பட்டு வரும் ரயில்வே அச்சகத்தை மூடும் முடிவை ஒத்தி வைத்திருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கடற்கரை சாலையில் இருந்து ராயபுரம் செல்லும் வழித்தடத்தில் ரயில்வே அச்சகம் அமைந்துள்ளது. இது, 1926ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இன்று நாம் எடுக்கும் அனைத்துவிதமான ரயில்வே டிக்கெட்டுகளும் இங்கே தான் அச்சடிக்கப்படுகின்றன. மேலும் அச்சகத்தில் ரயில்வே அட்டவணை, முன்பதிவிற்கான பாரம், அபராதத்திற்கான பாரம் என ரயில்ேவயில் உள்ள அனைத்துத் துறைகள் சம்பந்தமான பணிகளும் நடந்து வருகிறது.  சுமார் 1,200 விதமான அச்சடிப்பு பணிகள் நடந்து வந்ததாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். 2002ல் கணினிமயமான பிறகு அட்டை டிக்கெட்டுகளின் பயன்பாடு வெகுவாக குறைந்தது. இதனால் ராயபுரம் அச்சகம், கணினிக்கு தேவையான டிக்கெட்டுகளை அவுட்சோர்சிங் முறையில் வெளியே தனியார் அச்சகத்தில் இருந்து அச்சிட்டு வாங்கப்படுகிறது. இதற்கிடையே இந்தியாவில் இருந்த 14 அச்சகங்களில் 9 அச்சகங்களை மூட முடிவு செய்யப்பட்டது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, செகந்திராபாத்தில் உள்ள அச்சகங்கள் தவிர மற்றவை அனைத்தும் மூடப்பட்டன. கடந்த வருடம் திருச்சி அச்சகம் மூடப்பட்டு அங்குள்ள ஊழியர்கள் ராயபுரத்திற்கு மாற்றப்பட்டனர். இதனால், அட்டை டிக்கெட்டுகளின் அச்சடிப்பு பணி ராயபுரம் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தற்ேபாது ராயபுரம், பொத்தேரி உள்ளிட்ட 24 ஸ்டேஷன்களில் மட்டும் இந்த அட்டை டிக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கான அட்டை டிக்கெட்டுகள் மட்டும் ராயபுரத்தில் அச்சடிக்கப்படுகின்றன. முதலில், இவற்றை 250 டிக்கெட்டுகள் வீதம் கட்டுகளாக கட்டி வைத்து விடுகின்றனர். பின்னர் நிலையங்கள் வாரியாக பிரித்து அனுப்புகின்றனர். இதில், எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்குச் செல்ல வேண்டும், சீரியல் எண் என எல்லாமே பிரிண்டாகி இருக்கும். அன்றைய தேதியை மட்டும் டிக்ெகட் விற்பனையாளர் பதிவிடவேண்டியது இருக்கும்.

இந்த டிக்கெட்டுகள் எல்லாம் ஸ்டேஷன்களில் தனியார் ஏஜென்சி ஊழியர்கள் மூலம் கவுன்டரில் வழங்கப்படுகின்றன. அதாவது, ஒரு டிக்கெட்டிற்கு இவ்வளவு பணம் என அந்த ஏஜென்சிகளுக்கு கமிஷன் தொகையை ரயில்வே வழங்கும். 2014ல் நவீன தொழில்நுட்ப மிஷின் வந்ததும் முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் ராயபுரம் அச்சகத்திலேயே அச்சடிக்கப்பட்டன. இதிலும், சீரியல் எண், ரயில்வேயின் லோகோ உள்ளிட்டவை அச்சிடப்பட்டே வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை அந்தந்த நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் அவர்கள் பிரிண்டரில் சேர்த்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க வேண்டியதுதான். இங்கே தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, கிழக்கு கடற்கரை ரயில்வே, மேற்கு மத்திய ரயில்வே என நான்கு ரயில்வேக்களுக்கான அச்சடிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்போது நாளொன்றுக்கு 30 லட்சம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளும், 10 லட்சம் முன்பதிவு டிக்கெட்டுகளும் அச்சடிப்பதாக கூறுகின்றனர். இதுதவிர, இந்த டிக்கெட்டின் பின்பக்கம் விளம்பரம் அச்சிடப்படுகிறது. இதன்மூலம் ஒரு டிக்கெட்டிற்கு 1 ரூபாய் 75 பைசா கிடைப்பதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் மார்ச் மாதத்திற்குள் எல்லா அச்சகங்களையும் மூட ரயில்வே முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து அச்சக ஊழியர்கள் கலக்கத்தில் இருந்தனர். ரயில்வே துறைக்கு லாபம் தரும் இந்த அச்சகங்களை மூடக்கூடாது என்று அச்சக ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து மும்பை, ஹவுரா, டெல்லி, சென்னை ராயபுரம், செகந்திராபாத் ஆகிய 5 ரயில்வே அச்சகங்கள் வரும் மார்ச் 31ம் தேதியுடன் மூடப்படும் என்று அறிவித்திருந்தனர். பல்வேறு ரயில்வே அமைப்பினர் ரயில்வே அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த முடிவை வரும் ஜூன் 30ம் தேதி வரை ஒத்தி வைத்திருப்பதாகவும் அதன் பிறகு முடிவு செய்யப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், அச்சக ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags : closure ,Railway Press ,Raipur ,
× RELATED மே 3ல் நடக்க இருந்த நீட் தேர்வு ஒத்திவைப்பு: மறு தேதி விரைவில் அறிவிப்பு