×

மெரினா கடற்கரை லூப் சாலையில் வியாபாரம் செய்யும் இடத்திலேயே மீன் அங்காடி அமைக்க வேண்டும்: மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை,: மெரினா கடற்கரை லூப் சாலையில் தற்போது வியாபாரம் நடைபெறும் பகுதியிலேயே மீன் அங்காடி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, 2 ஏக்கரில் தற்காலிக மீன்அங்காடி அமைக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ₹66 லட்சத்தில் தற்காலிக மீன் விற்பனை அங்காடி அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். நீதிபதிகள் அடையாறு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் இருந்து பெசன்ட் நகர் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். நொச்சிக்குப்பம் அருகில் உள்ள சாலையில் மீனவ பெண்கள் மிக நீண்ட காலமாக மீன் விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில், சாந்தோம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடற்கரை உட்புற சாலையில் காலை, மாலையில் மட்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. தற்போது முழுமையாக இச்சாலையில் வாகனங்களை செல்ல வைக்கின்றனர்.

இதனால், இச்சாலையிலும் நெரிசல் ஏற்படுவதுடன், மீன் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, இங்குள்ள மீன் கடைகளை அகற்றி, வேறு இடத்தில் மீன் கடைகள் அமைத்து தருவதாக அதிகாரிகள் கூறினர். இதை அப்பகுதி மீன் வியாபாரிகள் ஏற்காமல், தங்களுக்கு தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே மீன் அங்காடி கட்டித்தர வேண்டும் என்று கூறினார். அமைச்சர் ஜெயக்குமாரும், மீன் கடைகள் அங்கிருந்து அகற்றப்படாது. அங்கேயே மீன் அங்காடி கட்டி தரப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் தற்போது போக்குவரத்து காவல் துறையினர் மீன் கடைகள் அருகே நோ பார்க்கிங் பலகை வைத்து, மீன் வாங்க வருபவர்களிடம் அபராதம் வசூலிக்கின்றனர். இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.  
எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், மெரினா கடற்கரை லூப் சாலையில் தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே மீன் அங்காடி அமைத்து தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Fish stall ,Marina Beach Loop Road ,
× RELATED மெரினா கடற்கரை லூப் சாலையில் நடைபாதை...