×

அயனாவரம் ரயில்வே குடியிருப்பில் தலைமை காவலர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை: ஆசாமிகள் துணிகரம்

அண்ணாநகர்,: அயனாவரத்தில் தலைமை காவலர் வீட்டில் 25 சவரன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமி களை போலீசார் தேடி வருகின்றனர். அயனாவரம் ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் (50). சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது மகளுக்கு விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இதற்காக 50 சவரன் நகைகளை வாங்கி வீட்டு பீரோவில் வைத்து இருந்தார்.  பின்னர், திருடர்களுக்கு பயந்து, அந்த நகைகளை 3 பகுதிகளாக பிரித்து, துணி பையில் வைத்து, வீட்டின் அலமாரியில் மறைத்து வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த நகைகள் பத்திரமாக உள்ளதா என சரிபார்த்தபோது, துணி பையில் மறைத்து வைத்திருந்த 25 சவரன் நகைகள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ரவிச்சந்திரன் ஐசிஎப் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, கடந்த 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களில் தலைமை காவலர் வீட்டில் வேலை செய்ய வந்த 3 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்டது தெரியவந்தது.

அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என விசாரித்து வருகின்றனர். தலைமை காவலர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு சம்பவம் முகப்பேர் புகழேந்தி சாலையை சேர்ந்த லதா (52), நேற்று   முன்தினம் வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், திடீரென லதாவின் கழுத்தில் கிடந்த 11 சவரன் தாலி செயினை பறிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட லதா, செயினை பிடித்துக்கொண்டு, அலறி கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும், லதாவை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவரது  கழுத்தில் கிடந்த  செயினை பறித்துக்கொண்டு தப்பி  சென்றனர். இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, செயின் பறிப்பு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags : jewelry robbery ,railway house ,Ayanavaram ,
× RELATED தூத்துக்குடி தாளமுத்து நகரில் துறைமுக ஊழியர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை