×

தேனி கலெக்டர் அலுவலகத்தில் பழுதான வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு துருப்பிடித்து வீணாவதால் ஏலம் விட கோரிக்கை

தேனி, பிப். 21: தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில், பழுதாகி நிறுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவைகளை ஏலம் விடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய்த் துறை அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமை அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகம், ஆதிதிராவிடர் நல அலுவலர் அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகம், முன்னாள் ராணுவத்தினர் உதவி இயக்குநர் அலுவலகம், கனிம வள உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகளுக்கு அரசு கார் வாகன வசதி உள்ளது.

இந்த வாகனங்கள் பழுதாகும்போது, அவைகளை பழுது நீக்க தேனியில் பழுது நீக்கும் மையம் இல்லை. தனியார் பழுது பார்ப்பு மையங்களுக்கே சென்று வாகனங்களை பழுது பார்க்க வேண்டியுள்ளது. இதற்கு அதிக செலவு ஏற்படுவதால், போதிய நிதி ஒதுக்கமுடிவதில்லை. இதனால், வாகனங்கள் பயன்பாடற்ற நிலைக்கு சென்று வருகிறது. தேனி கலெக்டர் அலுவலகத்தில் மட்டும் கண்டமான நிலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட அரசுத்துறை வாகனங்கள் உருக்குலைந்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை ஏலத்திற்கு விட்டால் அரசு கஜானாவிற்கு பணம் வந்து சேரும். ஆனால், பழைய கண்டமான கார்களை ஏலம் விடக்கூட உரிய நடவடிக்கை எடுக்காததால் வாகனங்கள் துருப்பிடித்து வீணாகும்நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை ஏலம் விட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : office ,Theni Collector ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்