×

மோட்டார் மூலம் நீர் எடுப்பதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சிவகங்கை, பிப்.21: சிவகங்கை நகராட்சி குடிநீர் சப்ளை குழாய்களில் மோட்டார் வைத்து நீர் எடுப்பதால் ஏராளமான மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 10க்கும் மேற்பட்ட ஊருணிகளே குடிநீர் ஆதாரங்களாக விளங்கின. பின்னர் சிறிய போர்வெல்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 1974ம் ஆண்டு இடைக்காட்டூர் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இடைக்காட்டூர் பகுதி வைகையாற்றில் போர்வெல் போடப்பட்டு அங்கிருந்து பல்வேறு கிராமங்கள் வழியே நகராட்சிக்கு குடிநீர் வழங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சிவகங்கை இணைக்கப்பட்டு காவிரி நீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாள் இடைவெளியில் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் கோடை காலங்களில் ஒரு வார இடைவெளியில் நீர் வழங்கப்படுகிறது. காவிரி நீர் கிடைப்பதில் ஏற்பட்ட பாதிப்பு, இடைக்காட்டூர் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் முடிவடையாதது உள்ளிட்டவற்றைவிட மோட்டார் மூலம் குடிநீரை எடுப்பதால் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.

நகராட்சியில் மொத்தம் 9 ஆயிரத்து 500 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதில் பெரும்பாலான வீடுகளில் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுகின்றனர். இதனால் மோட்டார் இல்லாமல் நேரடியாக குடிநீர் எடுக்கும் வீடுகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் ஒரே மாதிரியான குடிநீர் விநியோகம் இல்லாமல் சில பகுதிகளுக்கு குடிநீர் கிடைப்பது, சில பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்காமல் இருப்பது போன்ற நிலை ஏற்படுகிறது. மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதால் மேடான பகுதிகளுக்கு முழுமையாக குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்கள் நகராட்சிக்கு குடிநீர் இணைப்பு பணம் கட்டினாலும் கேன் குடிநீரை வாங்கி குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: மோட்டார் மூலம் நீர் எடுப்பதை கண்காணித்து மோட்டாரை பறிமுதல் செய்து பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் வரும் குழாய்களில் நீரின் வேகத்தை குறைக்கும் குண்டுகள் போடப்பட்டது. அதையும் பல இடங்களில் நகராட்சி பணியாளர்களே அகற்றுகின்றனர். இதை தடுக்க வேண்டும். காவிரி நீர் கிடைப்பதில் கடந்த ஆண்டு முதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முழுமையான நீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைக்காட்டூர் குடிநீர் திட்டப்பணிகளை விரைவில் முடித்து நீர் கிடைக்க செய்யவும், காவிரி திட்ட நீரை சரிவர சேமித்து தினமும் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : motorists ,
× RELATED குளத்தூர் அருகே 2 இடங்களில் குழாய்...