×

தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் போலி நபர்களிடம் ஏமாறும் பொதுமக்கள் பெண்களை குறி வைத்து மோசடி

சிவகங்கை, பிப்.21: சிவகங்கை மாவட்டத்தில் தவணை முறையில் பொருட்கள் வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்வது, தரமற்ற பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட மோசடி அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டதாகும். அதிகமான கிராமங்கள் கொண்ட இம்மாவட்டத்திற்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து பல்வேறு பொருட்கள் விற்பதாக ஒவ்வொரு ஊரிலும் தினந்தோறும் சில நபர்கள் வந்து செல்கின்றனர். மழைக்கோட்டு, போர்வை, தரை விரிப்பு, சேலை, பிஸ்தா, ஸ்வீட் என சாதாரண பொருட்களில் இருந்து பவள மாலை, ஸ்படிக மாலை என விலை உயர்ந்த பொருட்கள் வரை விற்பனை செய்கின்றனர். ஒரிஜினல் ஸ்படிக மாலை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. ரூ.ஆயிரத்திற்கு குறைந்து இந்த மாலை கிடைப்பதில்லை.

ஆனால் ரூ.300 முதல் ரூ.ஆயிரம் வரை போலி ஸ்படிக மாலை, பவள மாலை என சாதாரண பாசியால் செய்யப்பட்ட மாலைகளை ஏமாற்றி விற்றுச்செல்கின்றனர். வாங்கியவர்களுக்கு அந்த பொருள் ரூ.50 கூட பெறாது என சில நாட்கள் கழித்தே உண்மை புரிகிறது. குக்கர், பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், எலெக்ட்ரிக் அடுப்பு என ஏராளமான பொருட்கள் வழங்கப்படும் எனக்கூறி மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.100 முதல் பணம் வசூல் செய்கின்றனர். பொருட்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மாத தவணை தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. சிலர் குறிப்பிட்ட மாதங்கள் வரை வசூல் செய்துவிட்டு அதன் பின்னர் அப்பகுதிக்கு வருவதே இல்லை. சிலர் பல மாதங்கள் வசூல் செய்துவிட்டு தரமில்லாத பொருட்களை கொடுத்து செல்கின்றனர்.

கிராமங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்தே இதுபோன்ற மோசடிகள் நடந்து வருகின்றன. இது போன்ற மோசடிகள் குறித்து மிக அரிதாகவே போலீஸ் ஸ்டேசன்களில் புகார் அளிக்கப்படுகின்றன. போலீசார் கூறுகையில், தவணை சீட்டு கட்டுபவர்கள் சில மாதங்கள் கட்டிய பின் வசூல் செய்பவர்கள் வரவில்லையெனில் சில மாதங்கள் கட்டிய தொகையோடு போனதே என பேசாமல் இருந்துவிடுகின்றனர். கிராமங்களில் தனியாக உள்ள பெண்களே இது போல் அதிகம் ஏமாற்றப்படுகின்றனர். நகை பாலீஸ் போடுவதாக கூறி நகையை பறிகொடுப்பதும் நடக்கிறது. மோசடிகளில் அரிதான சில மட்டுமே புகார்களாக போலீசாரிடம் வருகிறது. ஏராளமான மோசடிகள் வெளியில் தெரிவதில்லை. மோசடிகள் குறித்து தினந்தோறும் ஏராளமான செய்திகள் வருகிறது. ஆனாலும் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றார்.

Tags :
× RELATED அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு...