×

மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இன்று நாள்முழுக்க நடை திறப்பு இரவில் வெள்ளிரத உற்சவம்

ராமேஸ்வரம், பிப்.21: மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயில் நடை இன்று நாள் முழுவதும் திறந்துவைக்கப்பட்டு சுவாமி சன்னதியில் அபிஷேக ஆராதனைகளும், இரவில் வெள்ளிரத உற்சவமும் நடைபெறும். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி சிவராத்திரி திருவிழாவின் எட்டாம் நாளான மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அதிகாலை துவங்கி இரவு முழுவதும் கோயில் நடைதிறக்கப்படும். அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறந்து ஸ்படிகலிங்க பூஜையும் தொடர்ந்து சுவாமி, அம்பாள் சன்னதியில் கால பூஜைகளும் நடைபெறும். காலை 9 மணிக்கு தங்க கேடயத்தில் நடராஜர் புறப்பாடாகி வீதியுலா நடைபெற்று கோயில் அனுப்பு மண்டபத்தில் பட்டயம் வாசித்தல் வைபவம் நடைபெறும். பகல் முழுவதும் கோயில் நடை திறந்து சுவாமி சன்னதியில் இடைவிடாது சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இரவு 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி ரதத்தில் எழுந்தருள வீதியுலா நடைபெறும். மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் விடியும் வரை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாள் சன்னதியில் அபிஷேகம் நடக்கும் என்பதால் இரவு முழுவதும் தடையில்லாமல் பக்தர்கள் தரிசனமும் நடைபெறும்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்து தரிசனம் செய்வதற்காக வடமாநிலங்களில் இருந்து அதிகளவில் சாதுக்களும், பக்தர்களும் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளனர். இதனால் பக்தர்கள் புனித நீராடவும், கங்கை அபிஷேகம் செய்து சிவனை வழிபடவும் தேவையான ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் கல்யாணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர். இரவு முழுவதும் விடிய விடிய கோயில் நடை திறந்திருக்கும் என்பதால் கோயில் பாதுகாப்பு பணியிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று சிவராத்திரி உற்சவத்தை தொடர்ந்து ஒன்பதாம் திருநாளான நாளை (பிப்.22) காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரோட்டமும், இரவு 8 மணிக்கு வீதியுலாவும் நடைபெறும். நாளை மறுநாள்(பிப்.23) பத்தாம் திருநாள் மாசி அமாவாசையை முன்னிட்டு மதியம் 1.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்கரிஷப வாகனங்களில் அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். சுவாமி அம்பாள் அகனிதீர்த்தம் புறப்பாடானவுடன் கோயில் நடை அடைக்கப்படும். இரவு 9 மணிக்கு மேல் மீண்டும் கோயில் நடை திறந்து சுவாமி அம்பாள் சன்னதியில் அர்த்தஜாமபூஜை மற்றும் பள்ளியறை பூஜை நடைபெறும்.

Tags : Rameshwaram ,celebration ,Maha Shivaratri ,
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு:...