×

இன்று மகாசிவராத்திரி குலதெய்வ கோயில்களில் குவியும் பக்தர்கள்

ராமநாதபுரம், பிப். 21:  மிகப்பழமையான பாரம்பரியம் கொண்ட மாவட்டமான ராமநாதபுரத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன.  வேறு இடங்களில் வசித்தாலும் மகாசிவராத்திரி அன்றும், மறுநாளும் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. சிவராத்திரி அன்று சைவம் மட்டுமே கோயில்களில் சமைத்து சாப்பிடுவர். அன்றிலிருந்து மூன்றாவது நாள் களரியன்று பாரிவேட்டை நடத்தி அசைவம் சாப்பிடுவதோடு வழிபாடு நிறைவு பெறும். சிலர் சிவராத்திரி அன்றும், சிலர் மூன்று நாட்களும் கோயிலில் தங்கி இருப்பார்கள். இன்று மகா சிவராத்திரி என்பதால் நேற்று முதல் குலதெய்வ கோயில்கள் நோக்கி லட்சக்கணக்கானோர் சென்ற வண்ணம் உள்ளனர். இன்று வழிபாடு நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை செய்து வருகின்றனர். இதனால் மற்ற நாட்களில் ஆள் நடமாட்டமே இல்லாமல் காட்டுப்பகுதிக்குள் இருக்கும் கோயில்கள் கூட நேற்று முதல் களைகட்ட தொடங்கி விட்டது. அனைத்து குலதெய்வ கோயில்களுக்கும் கார்கள், வேன்கள், டூவீலர்களில் என கூட்டம் கூட்டமாக பக்தர்கள் சென்றனர். இதில் அம்மன், கருப்பணசாமி, அய்யனார், முனியாண்டி கோயில்களே ஏராளமானவர்களுக்கு குல தெய்வமாக உள்ளன.   

இதுகுறித்து சென்னையை சேர்ந்த சங்கர் கூறுகையில், ‘எங்கிருந்தாலும் ஆண்டுதோறும் உறவினர்கள் உள்பட அனைவரும் குல தெய்வ வந்துவிடுவோம். மற்ற நாட்களில் வர முடியாது. இந்த ஒரு நாளில் நமக்கு யாரென்றே தெரியாத சொந்தங்களைக்கூட சந்திக்க முடிகிறது. குல தெய்வத்தை நம் முன்னோர்களாக நினைத்து வழிபட்டு வருகிறோம். மற்ற கோயில்களில் நமக்கு நேரம் கிடைக்கும்போது வழிபட செல்லலாம். ஆனால் குலதெய்வ கோயில்களில், சம்பந்தப்பட்ட கோயிலுக்கு பாத்தியப்பட்ட பங்காளிகள் அனைவரும் இணைந்து வழிபாடு நடத்த வேண்டும் என்பதால் கட்டாயம் வந்துவிடும் வழக்கம் உள்ளது. இன்று இரவு முழுவதும் விழித்திருந்து நாளை வரை வழிபாடு தொடரும்’ என்றார்.

Tags : devotees ,Mahasivarathri ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...