×

திருத்தணி முதல் சப்தகன்னிகள் கோயில் வரை சிதிலமடைந்து கிடக்கும் சாலை

திருத்தணி, பிப். 21: திருத்தணி-கன்னிகாபுரம் சாலையில் கன்னிகோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்லும் சிமென்ட் சாலையில் கற்கள் பெயர்ந்து, சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை உடனே சீரமைத்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான கன்னிகோயில் திருத்தணி-கன்னிகாபுரம் சாலையில் அமைந்துள்ளது. இது சப்த கன்னிகள் கோயில் என்பதால் பலருக்கு குலதெய்வமாக இருந்து வருகின்றது. சப்தகன்னிகளை குலதெய்வமாக வணங்கி வரும் பக்தர்கள்,  தங்கள் குழந்தைகளுக்கு முதன் முதலில்  மொட்டையடித்து முடி காணிக்கை செலுத்தி, கிடாக்கள் வெட்டி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விருந்து வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கானோர்  இந்த சப்த கன்னிகள் கோயிலுக்கு வந்து செல்வது உண்டு. இந்நிலையில் கோயில் அமைந்துள்ள நுழைவு வாயில் பகுதியில் இருந்து கோயில் வரை செல்ல சிமென்ட் சாலை உள்ளது. இந்த சாலையானது தற்போது சிதலமடைந்துள்ளதால் கரடுமுரடாக காட்சி அளிப்பதோடு ஆங்காங்கே கற்களும் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் சாலையில் நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கோயிலுக்கு செல்லும் வழியில் சிதலமடைந்து கிடக்கும் சிமென்ட் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘‘இங்குள்ள கன்னிகோயில் பெரும்பாலான பக்தர்களுக்கு குலதெய்வ கோயிலாக உள்ளது. இதனால் இந்த கோயிலுக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். இன்னமும் பலர் ஆந்திரா, சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் இருந்தும் இக்கோயிலுக்கு அடிக்கடி வருகின்றனர். அப்படி இருக்கும்போது இங்குள்ள சாலை சிதிலமடைந்து கிடப்பதால் வாகனங்களில் வர முடியாத நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் யாருமே கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதன் காரணமாக கோயிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்குநாள் குறையும் அபாயம் உள்ளது. மேலும், வருவாய் இழப்பும் ஏற்படும் நிலை உள்ளதால் இனியாவது இந்த சாலையை சீரமைக்க உடனடியாக அதிகாரிகள் முன்வர வேண்டும்’’ என்றனர்.

Tags : road ,Thiruthani ,Saptakanni Temple ,
× RELATED பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர் கைது