×

மதுராந்தகம் அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

மதுராந்தகம், பிப். 21: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில், மதுராந்தகம் அடுத்துள்ள வையாவூரில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மதுராந்தகம் வட்டாரத்தில் வையாவூர், மலைவையாவூர், பட்டுவாரி நகர், மாம்பட்டு, காந்திநகர், இலுப்பு தோப்பு, மூசிவாக்கம், கொளம்பாக்கம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்குள்ள, நத்தம், களம், மேய்ச்சல், கல்லாங்குத்து ஆகிய புறம்போக்கு இடங்களில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவர்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்பு அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வையாவூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
 
விவசாயிகள் சங்க செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கோதண்டம், குழு உறுப்பினர் அர்ஜுனன், கன்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு, மாவட்ட தலைவர் மோகனன், சிபிஎம் வட்ட செயலாளர் வாசுதேவன், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி சசிகுமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். எஸ்.கே.வாசுதேவன், திருமலை, கலையரசி மற்றும் 60 பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, போராட்டக்காரர்களை சந்தித்து பேசிய மதுராந்தகம் தாசில்தார் வேல்முருகன், அவர்களது கோரிக்கை குறித்து ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Maduranthanam ,
× RELATED மதுராந்தகம் அருகே சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு