×

வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையையொட்டி தடுப்புச்சுவர் இல்லாத பிச்சநாயக்கன் குளம்

வாலாஜாபாத், பிப்.21: வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையை ஒட்டியுள்ள பிச்ச நாயக்கன் குளத்துக்கு தடுப்புச் சுவர் இல்லாமல் உள்ளது. இதற்கு விபத்து ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். வாணணலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையை  ஒட்டி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில், தாங்கி கிராம கூட்டு சாலை இணையும் பகுதியில் கிராமத்துக்கு சொந்தமான ஒரு குளம் அமைந்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குடிமராமத்து பணியின் மூலம், இந்த குளத்தின் கரைகள் முழுவதும் பலப்படுத்தப்பட்டு, ஆழப்படுத்தினர். ஆனால், குளத்தின் 2 பகுதி கரைகள் மட்டுமே  சிமென்ட் கொண்டு பூசப்பட்டுள்ளது. மற்ற 2 பகுதிகள் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால், இந்த குளத்தில் மண் சரிந்து விழுந்து, மீண்டும் குளம் தூர்ந்து போகவும், முட்புதர்களும் வளரவும் வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையை ஒட்டி அமைந்துள்ள பிச்சநாயக்கன் குளம், கடந்த 4 மாதங்களுக்கு முன் முட்புதர்கள் சூழ்ந்து குட்டைபோல் இருந்தது. அதை முழுவதுமாக சீரமைத்து,மழைநீர் தேக்கி வைத்து, இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் இளைப்பாறுவதற்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஆனால், இந்த குளம் பாதுகாப்பின்றி காணப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த குளத்தின் அருகில், மின் விளக்குகள் இல்லாததால், புதிதாக இந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள், நள்ளிரவில் விபத்துக்களை சந்திக்கும் சூழல் நிலவுகிறது. முன்பு குளம் முழுவதும் முட்புதர்கள் அடைந்து கிடந்ததால், இவ்வழியாக செல்பவர்களுக்கு தெரியாமல் இருந்தது. தற்போது, குளம் சீரமைக்கப்பட்டு, அனைத்து கிராம மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஆனால், குளத்தை சுற்றி எந்த தடுப்பும் இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர். இதில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து, சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Bichanayakan Pond ,road ,Walajabad-Kanchipuram ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...