×

தூய தமிழ்பெயர்கள் நூல் அறிமுக விழா தமிழுக்கு இணையான மொழி இல்லை : ஜி.விஸ்வநாதன் பேச்சு

சென்னை: திருவள்ளூர் மாவட்ட தமிழியக்கம் சார்பில் “சூட்டி மகிழ்வோம் தூய தமிழ் பெயர்கள்” நூல் அறிமுகம், திருவள்ளுவர் நாள், கவிதை நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ் இயக்க தலைவர் மற்றும் நிறுவனர் வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து, தூய தமிழ் பெயர்கள் நூலை வெளியிட்டார். இதனை  தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார். பின்னர் ஜி.விஸ்வநாதன் பேசியதாவது:

இந்தியாவை போன்று அதிக மொழி பேசும் நாடு கிடையாது. நம் அரசியல் சட்டத்தில் 22 மொழிகளைதான் அங்கீகரித்து உள்ளோம். ஆனால், இங்கு பேசப்படுகின்ற பெரும் மொழிகள் 121. பெரும் மொழியுடன், சிறு மொழிகளையும் சேர்த்து வந்தால் 19,500 மொழிகள் நாட்டில் பேசப்படுகின்றன.
திராவிட மொழிகள் மொத்தம் 26. கிட்டத்தட்ட 28 கோடி மக்கள் திராவிட மொழிகளில் பேசுகின்றனர். ஆகவே, தமிழுக்கு இணையாக இன்னொரு மொழி கிடையாது. நமது மொழிதான் தொன்மையும், வளமையும் சிறந்த மொழியாகும். இன்று பெயர் வைப்பதில் வடமொழியும், பேசுவதில் ஆங்கிலமும் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். தூய தமிழிலேயே பெயர்களை வைக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட செயலாளர் சே.வரலட்சுமி, வட தமிழக ஒருங்கிணைப்பாளர் கு.வணங்காமுடி, மாநிலச்செயலாளர் மு.சுகுமார், மாநில பொருளாளர் வே.பதுமனார், மதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன்,  மண்டல செயலாளர் தமிழ்செல்வன், தமிழ்வளர்ச்சி துறை துணை இயக்குனர் சந்தானலெட்சுமி, ஜெயா கல்வி நிறுவன தலைவர் கனகராஜ், ஆலீம் முகம்மது சாலிக் கல்வி நிறுவன தலைவர் சேகு ஜமாலுதீன், திரைப்பட இயக்குனர் ராசராசா, டாக்டர் அசோகன், மண்டல செயலாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...