×

எண்ணூர் நேதாஜி நகரில் அம்மா உணவகம் முன்பு கழிவுநீர் தேக்கம்

திருவொற்றியூர்:  எண்ணூரில் அம்மா உணவகம் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அங்கு வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். திருவொற்றியூர் மண்டலம், 3வது வார்டுக்குட்பட்ட எண்ணூர் நேதாஜி நகரில் அம்மா உணவகம் உள்ளது. இங்கு 12 பெண்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் தினசரி இங்கு மலிவு விலையில் காலை, மாலை உணவு அருந்த வருகின்றனர். இந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லை. இதனால் அம்மா உணவகம் அருகே கீழ்நிலை தொட்டி கட்டப்பட்டு, அதில் கழிவுநீரை சேமித்து, நிரம்பியதும் குடிநீர் வழங்கல் வாரிய கழிவுநீர் அகற்று லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு  வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், இந்த தொட்டி நிரம்பியது. ஆனால், அதிலிருந்து கழிவுநீர் அகற்றப்படவில்லை. இதனால், தொட்டி நிரம்பி கழிவுநீர் வெளியேறி, அம்மா உணவகம் முன்பு தெருவில் தேங்கி உள்ளது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் உணவருந்த வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து அம்மா உணவக பணியாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மலிவான விலையில் உணவு கிடைக்கும் என்பதால் இங்கு வந்து உணவுகளை வாங்கி உண்கிறோம். ஆனால் கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் தொட்டி உள்ள இடத்திற்கு அருகாமையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்கள் லாரி மற்றும் கல்லூரி பேருந்துகளை நிறுத்தி விடுவதால் குடிநீர் வழங்கல் லாரி உள்ளே வந்து கழிவுநீரை எடுக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உடனடியாக இந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து, சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும், இங்கு தனியார் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : mother restaurant ,Nannur Netaji ,
× RELATED நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம்: ஐகோர்ட்டில் பொதுநல மனு