சிந்தாமணி பகுதியில் வசிப்பவர்கள் பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு

மதுரை, பிப். 21: புறம்போக்கு நிலத்தில் 60 ஆண்டுகளாக குடியிருக்கும் 500 வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன், பகுதிக்குழு செயலாளர் அபுதாகீர் மற்றும் சிந்தாமணி மெயின் ரோட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் வினயிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘‘சிந்தாமணி மெயின் ரோட்டில் சூசைப்பர் புரம், செபஸ்தியார்புரம், ராஜமன்நகர் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் 500 வீடுகளில் குடியிருந்து வருகிறோம். இந்த பகுதி கண்மாய் மற்றும் கால்வாய் புறம்போக்கு பகுதியாகும். இந்த கண்மாய் இருந்த பகுதி முழுவதும் குடியிருப்பாக மாறி பல ஆண்டுகளாகி விட்டது.நாங்கள் குடியிருக்கும் வீடு கண்மாய் புறம்போக்கு, எனவும், வீட்டை காலி செய்ய வேண்டும் எனக் கூறி, மதுரை தெற்கு தாலுகா தாசில்தார் அனைத்து குடியிருப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். ஏற்கனவே புறம்போக்கு பகுதியில் குடியிருந்து ஆட்சேபனை இல்லை என்றால், அங்கு பட்டா வழங்கலாம் என அரசு ஆணையிட்டுள்ளது. மேலும் நாங்கள் 60 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வருகிறோம். எனவே, குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக தெற்கு தாலுகா தாசில்தார் விசாரித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரை செய்தார்.

Advertising
Advertising

Related Stories: