மேலூர் அருகே தான் இந்த கூத்து சிவராத்திரி கலைநிகழ்ச்சிக்காக தயாராகும் கலையரங்கம்

* ஒரு பக்கம் கட்டுமானம்

* மறுபக்கம் பெயிண்ட் அடிப்பு

மேலூர், பிப். 21:மேலூர் அருகே கட்டப்படும் கலையரங்கத்தில் ஒரு பக்கம் கட்டிடத்திற்கு பூச்சுப்பணிகள் நடக்க, அது முடிந்த கையுடன் அங்கு பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடைபெறுகிறது.மதுரை மேலூர் அருகே செம்மினிப்பட்டி ஊராட்சியில் உள்ளது சுமதிபுரம். இங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ. 3 லட்சம் செலவில் கலையரங்கம் கட்ட முடிவு செய்யப்பட்டு, பணிகளும் துவங்கியது. ஆனால், ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் அப்பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் இந்த கலையரங்கத்தில் நடக்க வேண்டும் என்றும், அதற்காக எம்எல்ஏ இதனை வரும் ஞாயிற்றுகிழமை திறக்க உள்ளார் என்றும் ஒப்பந்ததாரரிடம் கூறப்பட்டுள்ளது. கட்டிட பணிகள் மட்டுமே முடிந்த நிலையில் பூச்சு வேலைகள் பாக்கி இருந்தது.இதனால் நேற்று முதல் அவசர அவசரமாக ஒரு பக்கம் பூச்சு வேலை நடக்க, அது காய்வதற்குள் அதன் மீது பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதுகுறித்து இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் மெய்யர் கூறுகையில், ``பல ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்க வேண்டிய கலையரங்கத்தை முதலில் தரமற்ற வகையில் கட்டினார்கள். அதற்கு மக்கள் எதிர்ப்பு அதிகம் ஏற்படவே மணலை கொண்டு கட்டும் பணி நடந்தது. அதுவும் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அவசரம் அவசரமாக பணிகள் நடைபெறுகிறது.இதனால் தரமற்ற வகையில் கட்டிடம் உள்ளது. இது குறித்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஆளுங்கட்சியினர் அதை சட்டை செய்யாமல் பணிகளை தரமற்ற வகையில் விரைந்து முடிக்கின்றனர்’’ என்று கூறினார்.

Related Stories: