பழநி பகுதியில் ஆக்கிரமிப்பில் அகப்பட்டு கிடக்கும் கண்மாய்கள்

பழநி, பிப். 21: பழநி பகுதியில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி பகுதி கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இப்பகுதியில் உள்ள அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்களை நம்பியுமே இக்கிராமங்களின் விவசாயம் இருந்து வருகிறது.  இதில் சில விவசாயிகள் கண்மாய் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். பின் ஆண்டுமுழுவதும் இவ்விவசாயிகள் தங்களுக்குள்ளாகவே கண்மாய் நிலத்தை பங்குபோட்டு விவசாய பணி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மெல்ல, மெல்ல கண்மாயின் நீர்பரப்பளவு குறைந்து கொண்டே போகிறது. இதனால் கண்மாய் நீர்பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வரும் பல நூறு ஏக்கர் விவசாயிகள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பழநி பகுதியில் இடும்பன் குளம், செங்குளம், பாலசமுத்திரம் மந்தைக்குளம் நீர்பிடிப்பு பகுதிகளில் சீசனுக்கு ஏற்ப வெள்ளரி, நிலக்கடலை, நெல் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பாலசமுத்திரம் மந்தைக்குளம் கண்மாய் மூலம்  நீர்ப்பாசனம் பெற்று விவசாயம் செய்து வரும் விவசாயி மாரிமுத்து கூறியதாவது, ‘நீண்ட காலமாக இக்கண்மாயில் ஆக்கிரமிப்பு விவசாயம் நடந்து வருகிறது.

பாலாறு- பொருந்தலாறு அணைக்கு செல்லும் சாலையின் அருகிலேயே ஆக்கிரமிப்பு விவசாயம் நடந்து வருகிறது. எனினும், அணைக்கு செல்லும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதனை கண்டும் காணாதது போல் சென்று விடுகின்றனர். இதனால் நீர் சேமிப்பு கடுமையாக பாதிப்படைகிறது. பழநி பகுதியின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான கண்மாய்களிலும் இதுபோன்ற ஆக்கிரமிப்பு நிகழ்வே அதிகளவு நடந்து வருகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட வேண்டும்’ என்றார்.

Related Stories: