×

குஜிலியம்பாறையில் மர்மநபர்களின் சதியால் மானாவாரி காட்டில் மீண்டும் தீ

குஜிலியம்பாறை, பிப். 21: குஜிலியம்பாறையில் மர்மநபர்களின் சதி வேலையால் மானாவாரி காட்டில் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். குஜிலியம்பாறையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). இவருக்கு சொந்தமாக குஜிலியம்பாறை- இலுப்பப்பட்டி ரோட்டில் 4 ஏக்கர் மானாவாரி காடு உள்ளது. தற்போது மானாவாரி காட்டில் சோளம் அறுவடை செய்து, சோளத்தட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் மர்மநபர் சிலர், மானாவாரி காட்டில் தீ வைத்து சென்றதாக தெரிகிறது. காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பிடித்து எரிய தொடங்கியது. தகவலறிந்து வந்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் பிரகாஷ் (பொ) தலைமையில் தீயணைப்பு துறையினர் வந்து சில மணி போராடி தீயை அணைத்தனர். இதில் காட்டில் அடுக்கி வைக்கப்பட்ட சோளத்தட்டையில் தீ பரவுவதற்கு முன்னரே, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று அணைத்தனர். இதனால் அங்கிருந்த சோளத்தட்டைகள் முழுவதும் தீ சேதத்தில் இருந்து தப்பியது. கடந்த சில வாரங்களாக கரிக்காலி, குஜிலியம்பாறை பகுதியில் உள்ள மானாவாரி காடுகளில் அடிக்கடி தீ பற்றி எரிவதும், பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதுமாக உள்ளனர். இந்த நாசவேலையில் ஈடுபடும் மர்மநபர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : forest fires ,Kuzliyambara ,
× RELATED காட்டுத்தீயில் சிக்கி 19 தீயணைப்பு வீரர்கள் பலி