பிளஸ் 2 பொதுத்தேர்வு 37,387 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

சேலம், பிப்.21: சேலம் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 387 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர் என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார். சேலம் கலெக்டர் ஆபீசில் இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் - 2020 நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை வகித்து பேசியதாவது: பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், 2019-2020 நடப்புக் கல்வி ஆண்டில் பிளஸ்2 பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி முதல் 24ம் தேதி வரையும், பிளஸ்1 பொதுத் தேர்வுகள் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக சேலம் மாவட்டத்தில் 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  பிளஸ்2 பொது தேர்வை 17,048 மாணவர்கள், 20,339 மாணவிகள் என மொத்தம் 37,387 தேர்வர்களும், பிளஸ்1 பொது தேர்வை 17,683 மாணவர்கள், 20,561 மாணவிகள் என மொத்தம் 38,244 தேர்வர்களும் தேர்வெழுத உள்ளனர். இதில் பிளஸ்2 தேர்வை 99 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும், பிளஸ்1 தேர்வை 116 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் எழுத உள்ளனர். இவர்களுக்கு அரசு விதிகளின்படி தேர்வெழுத சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

இடைநிலை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் 164 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை 45,063 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். இதில் 266 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் தேர்வெழுத உள்ளனர், இவர்களுக்கு அரசு விதிகளின்படி தேர்வெழுத சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வு மையங்களில் 135 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 135 துறை அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுகள் செம்மையாக நடைபெறுவதை உறுதிபடுத்துவதற்கும், பாதுகாப்பான முறையில் தேர்வுகளை நடத்திடும் வகையில், கலெக்டர் தலைமையில் அனைத்து துறைத் தலைவர்களுடன் தேர்வுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் வசதிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் விதிகளை மீறுபவர்களின் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு மையங்களில் எதிர்பாரா பார்வையிடும் பொருட்டு, முதுகலை ஆசிரியர்கள் நிலையில் 320 பணியாளர்கள் பறக்கும் படை குழுக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுக்கள் அனைத்து தேர்வு மையங்களையும் பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாளன்று, தேர்வு மையங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில் அந்நியர் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது.  இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.

Related Stories:

>