அரசு பள்ளி மாணவிகளை ஈவ்டீசிங் செய்த மாணவர்கள்

ெகங்கவல்லி, பிப்.21: வீரகனூர் பெண்கள் அரசுப்பள்ளியில் ஈவ்டீசிங்கில் ஈடுபட்ட 3 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த வீரகனூர் பேரூராட்சியில், அரசு பெண்கள் பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு வரும் மாணவிகளை, ஆத்தூர் மெயின் ரோடு பகுதியில் சுற்றி திரியும் சில இளைஞர்கள் ஈவ்டீசிங் செய்து வந்துள்ளனர். அதேபோல மாணவிகள் பள்ளிக்குள் வந்ததும், பள்ளி மாணவர்கள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள காம்பவுண்ட் சுவர் மீது சிலர் ஏறி நின்று விசில் அடிப்பதும், பெண் குழந்தைகளை ஆபாசமான வார்த்தைகள் சொல்லி கிண்டல் செய்வதுமாக இருந்துள்ளனர். இதனால் பள்ளி மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி, வெளியில் அமர்ந்து படிக்க முடியாமல், தலைமை ஆசிரியையிடம் முறையிட்டுள்ளனர். இதுகுறித்து, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, வீரகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரின்பேரில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளி காம்பவுண்ட் மீது ஏறி நின்று கொண்டு, சில பள்ளி மாணவர்கள், மாணவிகளை ஈவ்டீசிங் செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் காவல்துறையினருக்கு சென்றது. இதையடுத்து அதிரடியாக பள்ளிக்குள் நுழைந்த காவல்துறையினர்,  அங்கு ஈவ்டீசிங்கில் ஈடுபட்டிருந்த 3 மாணவர்களை கையும், களவுமாக பிடித்தனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Related Stories: