×

ஒகேனக்கல் வனப்பகுதியில் குட்டிகளுடன் யானைகள் முகாம்

தர்மபுரி, பிப்.21:  ஒகேனக்கல் வனப்பகுதிக்கு கர்நாடக மாநில யானைகள் இடம்பெயர்ந்து வந்துள்ள நிலையில், பொதுமக்கள் தேவை இல்லாமல் வனப்பகுதிக்குள் வருவதை தவிர்க்க வேண்டுமென வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக மாநில வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால், அங்குள்ள யானைகள் கூட்டமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி, மாநில எல்லைப்பகுதியான ஓசூர் சானமாவு பகுதிக்கு இடம்பெயர்ந்தன. அப்பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்ததால் அங்கிருந்து வனத்துறையினர் விரட்டியடித்தனர். இதனால், யானைகள் கூட்டம் அவ்வப்போது இடம்பெயர்ந்து ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், ஒகேனக்கல் வனப்பகுதியான முண்டச்சிப்பள்ளம் பகுதியில், குட்டிகளுடன் 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக இடம் பெயர்ந்துள்ளன. இந்த யானைகள் உணவுக்காக வனப்பகுதி மற்றும் சாலையோரங்களில் உள்ள மரக்கிளைகளை முறித்து சாப்பிட்டும், தண்ணீருக்காக காலை- மாலை வேளைகளில் பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையை கடந்து காவிரி ஆற்றுப்படுகை பகுதிக்கு செல்கின்றன. இதனால், சுற்றுலா பயணிகள் யானைகளிடம் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஒகேனக்கல் வனத்துறையினர் மடம் பகுதியில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியில் முகாமிட்டவாறு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம். சுற்றுலா செல்லும் பயணிகள் இடையில் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் காலை- மாலை வேளைகளில் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

Tags : Elephants Camp ,Cubs ,Oakenakkal Forest ,
× RELATED தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பெண் சிவிங்கி புலி 5 குட்டிகளை ஈன்றது