×

இழப்பீடுக்காக கார்களை ஜப்தி செய்ய முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்

நாமக்கல், பிப்.21: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், இழப்பீடுக்காக நீதிமன்ற அமினாக்கள் அரசுத்துறை கார்களை ஜப்தி செய்ய வந்தனர். முன்கூட்டியே கார்களை டிரைவர்கள் எடுத்து சென்று விட்டதால், எஞ்சியிருந்த திட்ட இயக்குனர் கார் முன் அமர்ந்து பெண், 6 மணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் அடுத்த வீசானத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை, ஆதிதிராவிட நல குடியிருப்புக்காக கடந்த 1987ம் ஆண்டு  கையகப்படுத்தப்பட்டது. பின்னர், 1996ம் ஆண்டு ₹77 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கூடுதல் இழப்பீடு தரக்கோரி, நாமக்கல் சார்பு நீதிமன்றத்தில் ரங்கநாதன் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில் கடந்த 2012ம் ஆண்டு உடல் நலம் குன்றி, அவர் இறந்து விட்டார். இதை அவரது மனைவி சந்திரா, வழக்கை நடத்தி வந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  நிலத்தை கையகப்படுத்திய ஆதிதிராவிடர் நலத்துறை, சந்திராவுக்கு ₹18.47 லட்சம் இழப்பீடாக வழங்கும்படி உத்தரவிட்டது. ஆனால், அதிகாரிகள் இழப்பீடு வழங்காமல் அலைகழித்து வந்தனர். இதையடுத்து சந்திரா, நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நாமக்கல் மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவித்யா, அரசுத்துறைக்கு சொந்தமான 5 வாகனங்களை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார். இதன்படி நேற்று  நீதிமன்ற அமீனாக்கள், சந்திராவுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதையறிந்த அரசுத்துறை வாகன ஓட்டுனர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வேறு இடங்களுக்கு கொண்டு சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அமீனாக்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் காரை ஜப்தி செய்ய முயன்றனர்.  ஆனால், அந்த காரின் சாவியை டிரைவர் எடுத்து சென்று விட்டதால், அந்த காரையும் ஜப்தி செய்ய முடியவில்லை. இதையடுத்து அந்த காரின் முன் சந்திரா அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதுபற்றி திட்ட இயக்குனர் மலர்விழி, கலெக்டர் மெகராஜிடம் முறையிட்டார். அதை தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், விரைவில் சந்திராவுக்கு இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக, நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பினார். அதை தொடர்ந்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. சுமார் 6 மணி நேரம், திட்ட இயக்குநர் வாகனத்தின் முன்பாக  சந்திரா தரையில் அமர்ந்திருந்தும், அதிகாரிகள் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Collector ,Office ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...