ராசிபுரம் ரயில் நிலையத்தில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பு

ராசிபுரம், பிப்.21: ராசிபுரம் ரயில் நிலையத்தில் நடைபயிற்சிக்கு வருபவர்களின் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததுடன், தட்டிக்கேட்ட முதியவர்களை தகாத வார்த்தைகளில் திட்டிய டூவீலர் ஸ்டாண்ட் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ரயில் நிலைய அலுவலரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ராசிபுரம் ரயில்நிலையத்தின் வழியாக சென்னை, பெங்களூரு, தென்மாவட்டங்கள், பழனி மற்றும் கேரளாவுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும், கரூர், திருச்சிக்கு பாசஞ்சர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ரயில்வே நிர்வாகம் சார்பில், இங்கு டூவீலர், கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, ராசிபுரம் ரயில் நிலையத்துக்கு தினமும் காலை, மாலை நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நடைபயிற்சிக்கு வருகின்றனர். இவர்கள் நடைபாதையில் ஒரு மணி நேரம் வரை நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இதில் ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினரும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காலை, மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள டூவீலர், கார்களில் வருபவர்களின் வாகனத்துக்கு, இங்கு டூவீலர் ஸ்டேண்ட் குத்தகை உரிமம் எடுத்துள்ளவர், கூடுதலாக கட்டணம் வசூலித்துள்ளார்.ஒரு மணி நேரத்துக்கு கட்டணமாக ₹15 முதல் ₹30 வரை வசூலிக்கிறார். வயதான முதியவர்கள் இதுகுறித்த கேட்டால், குத்தகைதாரர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை, நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, ரயில் நிலைய அலுவலர் ராமச்சந்திரனிடம், கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்தும், வயதானவர்களை ஸ்டேண்டில் பணியாற்றும் ஊழியர்கள் தகாத வார்த்தைகளில் திட்டியது குறித்து புகார் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட ரயில் நிலைய அலுவலர், இதுகுறித்து மேலதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: