×

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் ₹2.70 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திட்டக்குடி, பிப். 21:  திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் முகாமில் விருத்தாசலம் சார் ஆட்சியர் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் திட்டக்குடி, விருத்தாசலம், வேப்பூர் ஆகிய தாலுகா அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். முகாமில் மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனம், வங்கிகள் மூலம் ஆடு, மாடுகள் வாங்க கடன் உதவி, சலவை பெட்டிகள் உதவி, உதவி தொகை ஆகியவைகளை கேட்டு மனு கொடுத்தனர். இந்த முகாமில் 324  மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து இந்த முகாமில் 3 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்கள்.  20 பேருக்கு ஆண்டுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் என ஊனமுற்றோர் உதவி தொகை என 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளை வழங்கி சார் ஆட்சியர் பிரவீன்குமார் பேசும் போது பெறப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதும் உரிய ஆய்வு செய்யப்பட்டு தகுதியின் பேரில் தீர்வு காணப்படும் என குறிப்பிட்டார். முகாமில் திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேலன் சமூக பாதுகாப்பு தாசில்தார்கள் ரவிச்சந்திரன் (திட்டக்குடி), ஜெயசீலன் (வேப்பூர்), தேர்தல் பணிகள் துணை தாசில்தார் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : camp ,
× RELATED பாஜக அரசு கட்டிக்கொடுத்த இலவச வீடுகள்...