புதுவையில் இருந்து திண்டிவனத்துக்கு மினிலாரியில் கடத்திய 1200 மதுபாட்டில்கள் பறிமுதல்

திண்டிவனம், பிப். 21: திண்டிவனத்தில்  மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையில் புதுச்சேரியில்  இருந்து மினிலாரியில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் மாவட்ட  மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் விஷ்ணுபிரியா தலைமையில் உதவி  ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது புதுச்சேரியில்  இருந்து திண்டிவனம் நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.  அப்போது டிரைவர் மினி லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். பின்னர் அந்த வாகனத்தை சோதனை செய்தபோது 25 அட்டைப்பெட்டிகளில் 1200 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள்  இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் திண்டிவனம்  மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். பறிமுதல்  செய்யப்பட்ட மினி லாரி, புதுச்சேரி மது பாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.3  லட்சம் இருக்குமென போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: