தனவேலு எம்எல்ஏ மீது அவதூறு வழக்கு

புதுச்சேரி, பிப் 21: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்திய தனவேலு எம்எல்ஏமீது அவதூறு வழக்கு தொடரப்படுமென வழக்கறிஞர் மூலம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். அப்போது ஆளும் அரசையும், முதல்வர், அமைச்சர்கள் மீது சரமாரியாக குற்றம் சாட்டினார். இதையடுத்து அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய தனவேலு காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கவர்னர் கிரண்பேடியை சந்தித்து, அமைச்சர்கள் ஊழல் செய்வதாகவும், நடவடிக்கை எடுக்குமாறு புகார் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து அரசு கொறாடா அனந்தராமன், சபாநாயகரை சந்தித்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுக்கொடுத்தார். இதற்கு 7 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. கெடு முடிந்ததும், மீண்டும் சபாநாயகரை சந்தித்து மேலும் 2 வார கால அவகாசம் வழங்குமாறு மனு கொடுத்தார்.இதன் மீது சபாநாயகர் என்ன முடிவு எடுத்தார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது இடத்தில் அமைச்சர்கள் பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும், உரிய விளக்கம் தர வேண்டும்.  ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டு என் பெயருக்கும், புகழுக்கும் களங்கள் ஏற்படுத்தியுள்ளீர்கள். எனவே உரிய விளக்கத்தினை எழுத்துப்பூர்வமாக தராவிட்டால், உங்கள் மீது அவதூறு மற்றும் மானநஷ்ட வழக்கு தொடருவேன் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தன்னுடைய வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Related Stories: