×

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதி 8 ஆண்டாக பூட்டி கிடப்பதால் மாணவர்கள் கடும் அவதி

கரூர், பிப். 21: அரசுபாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர் விடுதி 8 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி காணியாளம்பட்டியில் அரசு பலவகை தொழில்நுட்பக்கல்லூரி கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்டது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்து வந்தும் மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் இதுவரை 2 ஆயிரம் ஏழை மாணவர்கள் கல்வி பயின்று உள்ளனர். நடப்புக்கல்வி ஆண்டில் சுமார் 800 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். துவக்கத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த அரசு பலவகை தொழில்நுட்பக்கல்லூரி பின்னர் 2012ம் ஆணடில் கல்லூரி கட்டடங்கள், நூலக கட்டடம், ஆய்வக கட்டடம் என கட்டப்பட்டதுடன் 500 மாணவர்கள் தங்குவதற்கு வசதியாக விடுதிக்கான கட்டடமும் கட்டப்பட்டது.

விடுதி கட்டடம் கட்டியும் திறக்கப்படவில்லை. 8 ஆண்டுகளாக விடுதி செயல்படாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் அதிகம் செலவு செய்து வெளியில் தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். ஏன் விடுதிக்கட்டிடம் செயல்படவில்லை என கேட்டால் தண்ணீர் பிரச்னை என நிர்வாகம் கூறுகிறது. தண்ணீர் பிரச்னையைக்காரணம் காட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியை செயல்படுத்தாமல் உள்ளனர். 8 ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடப்பதால் விடுதிக்கட்டிடத்தை சுற்றி புல்பூண்டுகள் முளைத்து காணப்படுகிறது. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கண்டு பல கோடி மதிப்பில் கட்டடப்பட்ட விடுதி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கரூர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டத்தை சேர்ந்த ஏழை மாணவர்களும் அதிக அளவில் கல்வி பயில பயனுள்ளதாக இருக்கும் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Tags : Government Polytechnic College ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...