×

சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா

திருப்பூர், பிப்.21:திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற விஸ்வேஸ்வரசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சிவராத்திரி விழா இன்று (21ம் தேதி) தொடங்கி நாளை வரை நடக்கிறது.திருப்பூர் விஸ்வேஸ்வரசாமி கோயிலில் சிவராத்திரியையொட்டி இன்று (21ம் தேதி) இரவு 7 மணி முதல் 9 மணி வரை முதல்கால பூஜையும், இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 2ம் யாக கால பூஜையும், நள்ளிரவு 12 மணி முதல் நாளை அதிகாலை 3 மணி வரை 3ம் கால பூஜையும், அதிகாலை 3 மணி முதல் காலை 5.30 மணி வரை 4ம் கால பூஜையும் நடக்கிறது. ஒவ்வொரு கால பூஜையின்போதும் 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது. அபிஷேகத்துக்கு பின் அலங்கார பூஜை நடக்கிறது. உடுமலை ருத்ரப்பாநகரில் உள்ள சித்திவிநாயகர் கோயில், விசாலாட்சி உடனமர் பஞ்சமுகலிங்கேஸ்வரர் கோயில், ஸ்ரீ ரேணுகா தேவி அம்மன் கோயில்களில் இன்று இரவு 7 மணிக்கு முதல் கால பூஜை நடைபெறுகிறது. இரவு 10.30 மணிக்கு 2வது கால பூஜை மற்றும் ஹோமம் நடைபெற உள்ளது. நள்ளிரவு 1 மணி அளவில் 3வது கால பூஜையும், அதிகாலை 4.30 மணி அளவில் 4வது கால பூஜையும் நடைபெறுகிறது. சிவராத்திரியையொட்டி பஞ்சகவ்யம், பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம்,கரும்புச்சாறு என ஒவ்வொரு கால பூஜையின்போதும் ஒவ்வொரு விதமான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற உள்ளது.

மேலும் முதல் கால பூஜையின்போது ஸ்ரீ பஞ்சமுகலிங்கேஸ்வரருக்கு சந்தன காப்பு, 2ம் கால பூஜையின் போது ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கஸ்தூரி கலந்த அகில், 3ம் கால பூஜையின்போது ஸ்ரீ அடிமுடியோனுக்கு ஜவ்வாது கலந்த பச்சை கற்பூரமும்,4ம் கால பூஜையின்போது ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரருக்கு சந்தனம், கஸ்தூரியால் அலங்காரம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து சிவனுக்கு தாமரை, வில்வம், குருத்தை இலை, துளசி, முல்லை பத்ரம், கிலுவை இலை, நீலுநிற பூக்கள், நொச்சி, வில்வ பத்ரம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது.சிவராத்திரி பூஜையில் பங்கேற்கும பக்தர்கள் பூஜைக்கு தேவையான மலர்கள், திரவியங்கள் மற்றும் பூஜை பொருட்களை கோயிலுக்கு கொண்டுவந்து கொடுக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : festival ,Maha Shivaratri ,Shiva ,temples ,
× RELATED 10 ஆண்டுகளுக்கு பிறகு கீழத்தூவலில் மீன்பிடி திருவிழா உற்சாகம்