×

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்

உடுமலை,பிப்.21: மடத்துக்குளம் வட்டாரத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் தென்னை பயிரிட்டுள்ளனர். சமீப காலமாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கண்டறியப்பட்ட ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் தென்னை மற்றும் வாழை, காய்கறி, வெண்டை, தக்காளி பயிர்களில் மகசூல் பாதிக்கப்படும்.இந்த பூச்சி இலைகளில் இருக்கும் பச்சையத்தை உறிஞ்சிவிடும். இது சுருள் சுருளாக முட்டையிடும். இலையின் அடிப்பாகத்தில், மெழுகு பூச்சு போன்று காணப்படும். வறட்சி காலங்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும்.இந்த பூச்சியை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிகொல்லி மருந்து தெளிக்கக்கூடாது. வேப்பெண்ணையை ஒட்டும் திரவத்தோடு ஒரு லிட்டருக்கு 10 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது தாவரப்பூச்சிக் கொல்லியான அசாடிராக்டின் மருந்தை ஒரு லிட்டருக்கு 2 முதல் 5 மில்லி சேர்த்து பாதிக்கப்பட்ட இலைகளின் மேல் நன்றாக படுமாறு தெளிக்க வேண்டும்.

இந்த மருந்துகளை அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த மடத்துக்குளத்தில் வேளாண் பல்கலை பூச்சியியல் துறை வல்லுநர்கள் பயிர் பாதுகாப்பு இயக்குநர் பிரபாகரன், பேராசிரியர்கள் சாத்தையா, முத்துக்கிருஷ்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா, தென்னை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் அழகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின்போது திருப்பூர் வேளாண்மை இணை இயக்குநர் மனோகரன் மற்றும் துணை வேளாண்மை இயக்குநர் வடிவேலு, தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் விஜய கல்பனா மற்றும் மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண் அலுவலர்கள் உடனிருந்தனர்.



Tags : fly attack ,
× RELATED தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ...