அதிக விலை கிடைக்கும் வரை கண்வலி விதைகளை இருப்பு வைக்க விவசாயிகளுக்கு அறிவுரை

திருப்பூர், பிப்.21: திருப்பூர் மாவட்டத்தில் செங்காந்தள் விதை விவசாயிகளின் நலன் கருதி அதிக விலை கிடைக்கும் வரை இருப்பு வைத்து விற்பனை செய்ய குறைந்த வட்டிக்கு, வங்கி மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு

செங்காந்தள் விதை விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லிங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், தாராபுரம், மூலனூர், வெள்ளக்கோவில், முத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களில் வறட்சியை தாங்கி வளரும் செங்காந்தள் செடியை சிறு பந்தல் அமைத்து விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இதன் விதை மருத்துவ குணம் நிறைந்ததாக இருப்பதால் வெளிநாடுகளில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். இதற்காக, மூலனூர், கள்ளிமந்தையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த புரோக்கர்கள்  சிண்டிகேட் அமைத்து விலை உயர்வு இன்றி கண்வலி விதை விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால் கண்வலி விதை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கண்வலி விதை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வரை விற்பனை செய்யாமல் இருப்பு வைக்க அனைத்து விவசாயிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கடந்தாண்டு துவக்கத்தில், கிலோ, ரூ.3,800க்கு விற்ற விதை, பின், ரூ.1,300க்கும் கீழாக குறைந்துவிட்டது. ‘மேக்’ நிறுவனத் தலைவர் மனுநீதி மாணிக்கம் மூலம் கிலோ, 2 ஆயிரம் ரூபாய்க்கு உறுதியளிக்கப்பட்டு விதை கொள்முதல் செய்யப்பட்டது. இந்தாண்டு, விவசாயிகள் விதையை இருப்பு வைத்து விற்றால் ரூ.3 ஆயிரத்திற்கு மேல் விற்கும் வாய்ப்பு உள்ளது. நிதி நெருக்கடியால் தவிக்கும் விவசாயிகளின் நலன் கருதி மனுநீதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம், விவசாயிகள், ஸ்டேட் வங்கியில், 22 கோடி ரூபாயை, மாதம் 0.33 சதவீத வட்டிக்கு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்வலி விதைகளை  இருப்பு வைத்து கடன் பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்காமல் விதையை இருப்பு வைத்து கூடுதல் விலை கிடைக்கும் வரை காத்திருந்து விற்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Related Stories: