×

டால்பின் முனைக்கு செல்ல அனுமதி

குன்னூர், பிப். 21:  குன்னூரில் கேத்ரின் நீர்விழ்ச்சி, லாம்பாறை, பள்ளதாக்கு, கட்டாரி அருவி, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில், வனப்பகுதியை ஒட்டிய லேம்ஸ்ராக் காட்சிமுனை, அனைத்து சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.இதனால் இந்த பகுதிக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதி வழியாக சென்று அங்குள்ள காட்சி முனையை கண்டுகளித்து வருகின்றனர்.இந்த காட்சி முனை கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரத்து 536 அடி உயரமும் கொண்டுள்ளது. இங்கிருந்து பார்த்தால், சமவெளி பகுதிகளும், மலைரயில் ஊர்ந்து வருவதும், ஆதிவாசி குடியிருப்புகளும், சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

சமீப காலமாக பர்லியார் ஊராட்சி சார்பில் இங்கு சுற்றுலா வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆய்வு செய்த வனத்துறை உயர் அதிகாரிகள், காப்பு வனப்பகுதியான இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.  பர்லியார் ஊராட்சி மற்றும் வனத்துறை இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, இந்த சுற்றுலா மையத்தை நம்பி உள்ள கடை வியாபாரிகள் மட்டுமில்லாமல், சுற்றுலா வாகன ஓட்டுநர்களும் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகினர். எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி விரைவில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி நேற்று முதல் காட்சி முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வாடகை கார் ஓட்டுநர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டதால் டால்பின் நோஸ் காட்சி முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.



Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை