மகாசிவராத்திரி மலையேற்றம் வெள்ளிங்கிரியில் பக்தர்களை கண்காணிக்க சிறப்பு குழு

கோவை, பிப். 21:  கோவை போளூவாம்பட்டி வனத்துறையினர் சார்பில் வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களை கண்காணிக்க வனத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் கடல்மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. இந்த ஆண்டு வெள்ளிங்கிரி மலையேற்றத்தில் ஈடுபட பக்தர்களுக்கு கடந்த மாதம் முதல் வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று மகாசிவராத்திரி என்பதால் ஏராளமான பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லவும், மலைப்பகுதியில் சமையல் செய்து அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முள்ளங்காடு முதல் தாணிகண்டி வரை வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertising
Advertising

இது தவிர, மலையேற்றத்தில் ஈடுபடும் பக்தர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், நாளை வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இது குறித்து போளூவாம்பட்டி ரேஞ்சர் ஆரோக்கியசாமி கூறுகையில், ‘‘வெள்ளிங்கிரி மலையேற்றத்தில் ஈடுபடும் பக்தர்களை கண்காணிக்க ஷிப்ட் அடிப்படையில் 14 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மலையேற்றத்தின் போது பக்தர்கள் எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களை சோதனை செய்ய மலையடிவாரத்தில் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை நடமாட்டம் இருப்பதால் இருசக்கர வாகனத்தில் மாலை 6 மணிக்கு மேல் வருவது, பூண்டி சாலையில் இரவு நேரத்தில் நடந்து கோயிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: