வழிப்பறி, நகை பறிப்பு, பைக் திருட்டா? வழக்குப்பதியாமல் போலீசார் மெத்தனம்

கோவை, பிப்.21: கோவையில் வழிப்பறி, நகைப்பறிப்பு, பைக் திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்வதில் போலீசார் மெத்தனமாக உள்ளனர். புகார்தாரர்கள் அலைக்கழிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை நகரில் 15 காவல் நிலையங்களும், மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 35 காவல் நிலையங்களும் உள்ளன. இங்கு தினசரி நகைபறிப்பு, வழிப்பறி, பைக் திருட்டு போன்ற குற்றங்கள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வருகின்றன. இவற்றை போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டி வருவதாக சமீபகாலமாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக கோவை மாநகரைக்காட்டிலும் புறநகர் பகுதிகளான துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை, ஆலாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் தினமும் ஏராளமான திடுட்டுகள் சம்பந்தமாக புகார்கள் வருகின்றன. இவற்றில் சிலவற்றை வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் தட்டிக்கழிக்கின்றனர். நகை, பைக், செல்போன் திருட்டு போன்றவற்றில் புகார் கொடுக்க சென்றால், வழக்குப்பதிவு செய்வதால் உங்களுக்குத்தான் வீண் அலைச்சல், கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டியிருக்கும். பொருட்களை கண்டுபிடித்தால் உங்களை அழைத்து ஒப்படைத்து விடுகிறோம் என்று கூறி புகாரை மட்டும் பெற்றுக் கொண்டு திருப்பி அனுப்பி விடுகின்றனர். போலீசாரின் இது போன்ற செயல்கள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:- எங்களுடைய உறவினர் ஒருவரின் வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகை திருட்டு போனது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றால், வழக்கினை பதிவு செய்யாமல் உங்களுக்கு வீண் சிரமம் வேண்டாம். நாங்கள் கண்டுபிடித்தால் உடனே ஒப்படைப்போம் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இது போன்ற செயல்களால்தான்  போலீசார் மக்களிடையே நம்பகத்தன்மையை இழந்து வருகின்றனர். மேலும் திருட்டு நகைகள் முழுவதுமாக பறிமுதல் செய்யப்பட்டாலும், முறையான கணக்கினை காட்டுவதில்லை. இது போன்று கோவை மாநகரம் மட்டுமல்லாது புறநகர் காவல் நிலையங்களிலும் இதே நிலைதான் தொடர்கிறது. உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்படுவதில்லை. குறிப்பிட்ட காவல் நிலையத்திலேயே மூடி மறைக்கப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொருட்களையும் பறிகொடுத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிக்கின்றனர். இதுபோன்ற ஏராளமான நகைப்பறிப்பு, வழிப்பறி, பைக் திருட்டு வழக்குகள் கண்டுபிடிக்காமல் நிலுவையில் உள்ளன. எனவே உயர் அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். காவல் துறை உயர் அதிகாரிகளிடம் நகைப்பறிப்பு, பைக் திருட்டு போன்ற சம்பவங்களில் வழக்குப்பதிவு நிலவரம், பறிமுதல், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் குறித்து கேட்டால் உரிய பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே எந்தவொரு வழக்காக இருந்தாலும் முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: