லுங்கி நிறுவன மேனேஜர் சாவிற்கு காரணமானோரை கைது செய்ய கோரி மறியல்

ஈரோடு, பிப்.21:ஈரோட்டில் லுங்கி நிறுவன மேனேஜர் சாவிற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த இளமுருகன் (55). இவர், ஈரோட்டில் உள்ள லுங்கி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் கையாடல் நடந்திருப்பதாக வந்த புகாரின் பேரில், இளமுருகனிடம் கடந்த 18ம் தேதி இரவு நிறுவன ஊழியர்கள் 6 பேர் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, இளமுருகன் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரை சக ஊழியர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு இளமுருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து இளமுருகன் மகன் உதயக்குமார் (29) ஈரோடு டவுன் போலீசில் புகார் அளித்தார்.அதில், தனது தந்தை உடலில் ரத்த காயம் இருந்ததால் சாவில் சந்தேகம் உள்ளது என கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார், இளமுருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நிறுவன ஊழியர்கள் 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், இளமுருகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு உள்ள ஈவிஎன் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், `இளமுருகன் சாவில்  சந்தேகம் உள்ளது. அதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். நிறுவன உரிமையாளர் உடனடியாக இங்கு வர வேண்டும். அவரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். பிரேத பரிசோதனையை தாசில்தார் போன்ற அரசு அதிகாரி முன்னிலையில் நடத்த வேண்டும்’ என்றனர்.இது குறித்து தகவல் அறிந்து வந்த டவுன் டி.எஸ்பி. ராஜூ, இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததால் இளமுருகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களான 8 பெண்கள் உட்பட 25 பேரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர். இந்த மறியலால் அரசு மருத்துவமனை முன்பு அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: