-பாதாள சாக்கடை திட்டத்தில் 13 ஆயிரம் கழிவுநீர் குழாய்கள் இணைப்பு

ஈரோடு, பிப்.21: ஈரோடு மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் 13 ஆயிரம் கழிவுநீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்களில் வரும் கழிவுநீர், சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தினமும் 70 லட்சம் லிட்டர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள வீடு, வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடையில் கலக்காமல் நேரடியாக பாதாள சாக்கடை மூலம் கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிப்பு செய்யும் வகையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டம் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டு உள்ளாட்சி மற்றும் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.61.89 கோடியும், ஜெர்மன் நிதி ஆதாரத்தில் இருந்து கடனாக ரூ.71.14 கோடியும், மானியமாக 62.77 கோடி ரூபாயும், உள்ளூர் திட்டக்குழு மானியமாக 3.60 கோடி ரூபாயும், கூடுதல் மானியமாக ரூ.9.82 கோடியும் என ரூ.209.22 கோடி மதிப்பீட்டில்  செயல்படுத்தப்படுகிறது.இதற்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள கழிவுநீர் குழாய்கள் பாதாள சாக்கடையுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது. பாதாள சாக்கடையில் வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பீளமேடு பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை மாநகராட்சி பகுதிகளில் 13 ஆயிரம் கழிவுநீர் குழாய்கள் பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டு தினமும் 70 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு சுத்திகரிப்பு செய்யப்படும் நீரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மரங்கள், கழிப்பறைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள சுத்திகரிக்கப்பட்ட நீரை வாய்க்கால்கள் மூலம் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. தற்போது, பெரும்பள்ளம் ஓடை ரூ.180 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி துவங்கி உள்ளதால் திண்டல் பகுதியில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் பெரும்பள்ளம் ஓடையில் கலக்காத அளவிற்கு பாதாள சாக்கடை திட்டத்தில் இந்த பகுதி இணைக்கப்படுகிறது. இங்குள்ள 8 ஆயிரம் கழிவுநீர் குழாய்களை இணைக்க 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:மாநகராட்சி பகுதியில் 1.30 லட்சம் குடியிருப்புகள் உள்ளது. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அடுத்த 30 ஆண்டுகளில் சேரும் கழிவுநீரை கருத்தில் கொண்டு தினமும் 5 கோடி லிட்டர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு செய்யும் நீரை மாநகராட்சி பயன்பாட்டிற்கு போக மீதம் பெரும்பள்ளம் ஓடை வழியாக காவிரி ஆற்றில் கலந்து விடப்படுகிறது. தற்போது, இந்த பாதாள சாக்கடை திட்டத்தில் 13 ஆயிரம் கழிவுநீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் 70 லட்சம் லிட்டர் கழிவுநீர், சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 1.30 லட்சம் வீடுகளில் 80 ஆயிரம் இணைப்புகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட உள்ளது. கூடுதலாக திண்டல் பகுதியை பாதாள சாக்கடையுடன் இணைக்க 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் டெண்டர் விடப்படவுள்ளது. அதற்கு பிறகு பணிகள் துவங்கி 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: