×

கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மேலவீதி, தெற்கு வீதியில் குளம்போல் தேங்கிய கழிவுநீர்

கும்பகோணம், பிப். 21: கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மேலவீதி மற்றும் தெற்கு வீதிகளில் குளம்போல் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர்.கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் நான்கு வீதிகளிலும் துணிக்கடைகள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், மருந்து கடைகள், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. இதனால் இந்த பகதியில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும். நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில் 75க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.நாகேஸ்வரன் கோயில் வடம்போக்கி தெருவில் பல ஆண்டுகளாக சாலை உள்வாங்கி கழிவுநீர் தேங்கி நின்றது. பின்னர் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அப்பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் கடந்த ஒரு மாதமாக நாகேஸ்வரன் கோயில் மேலவீதி மற்றும் தெற்கு வீதிகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகி அதன் வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் நகர பகுதியை சுத்தம் செய்து சுகாதாரமாக வைக்கும் துப்புரவு தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் பல நாட்களாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதையும், கொசுக்கள் தொல்லையால் கைகுழந்தை முதல் முதியவர் வரை சிரமம்பட்டு வருவதை கண்டுகொள்ளாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.எனவே கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மதில் சுவர் ஓரம் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டுமென பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kumbakonam Nageshwaran Temple Melavidi ,South Road ,
× RELATED திருச்சியில் திருவானைக்காவல் கோயில் தேரோட்டம் பாதியில் நிறுத்தம்..!!