கும்பகோணம் பகுதியில் உரிமமின்றி இயங்கிய 6 கடைகளுக்கு சீல் வைப்பு

கும்பகோணம், பிப். 21: கும்பகோணம் பகுதியில் உரிமம் இல்லாமல் இயங்கி 6 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.கும்பகோணம் பெரியகடைத்தெரு, ஆழ்வான்கோயில் தெரு, கும்பேஸ்வரர் தெற்கு வீதி பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள், பேக்கரி, எண்ணெய் கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், மளிகை கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் மகேஷ், சந்திரமோகன், கருப்புசாமி உள்ளிட்டோர் நேற்று காலை சோதனை நடத்தினர். அப்போது உரிய உரிமம் இல்லாமல் இயங்கிய 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கோர்ட்டில் மேல்நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து நியமன அலுவலர் புஷ்பராஜ் கூறுகையில், கும்பகோணத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் உரிமம் பெற வேண்டும் என 2 மாதத்துக்கு முன்பே நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு முன் உரிமம் இல்லாத கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கும்பகோணத்தில் உள்ள 6 கடை உரிமையாளர்கள் உரிமம் எடுக்காமல் இருந்ததால் சீல் வைத்துள்ளோம்.மேலும் அந்த கடைகள் மீது தஞ்சை கோர்ட்டில் 6 மாத சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் பிரிவின்கீழ் வழக்கு தொடரப்படும். எனவே அனைத்து வணிகர்களும் தங்களது கடைகளுக்கு உடனே உரிமம் பெற்று கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் திடீர் சோதனை நடத்தி கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.

Related Stories: