குடந்தை உச்சிபிள்ளையார் கோயில் மூலையில் ஆபத்தான நிலையில் போலீஸ் கண்காணிப்பு கோபுரம்

கும்பகோணம், பிப். 21: கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோயில் மூலையில் இரும்பினாலான போலீஸ் கண்காணிக்கும் கோபுரம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள், பக்தர்கள், வணிகர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோயில் பகுதியில் 5 பிரிவாக சாலைகள் ஒன்று கூடுகிறது. கும்பகோணம் பகுதிக்குள் நுழைய வேண்டுமானால் உச்சிபிள்ளையார் கோயில் சாலை பிரதானமாகும்.மேலும் வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், கோயில்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தேவைக்கும் உச்சிபிள்ளையார் கோயில் சாலை வழியாக தான் மக்கள் செல்ல வேண்டும். இதனால் உச்சி பிள்ளையார் கோயில் சாலை எந்நேரமும் பரபரப்புடன் காணப்படும். இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதை கருத்தில் கொண்டு கடந்த 2016ம் ஆண்டு போக்குவரத்து சீர்செய்வதற்காகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் உச்சிபிள்ளையார் கோயில் மூலையில் இரும்பினாலான சுமார் 15 அடி உயரத்தில் கண்காணிக்கும் கோபுரம் அமைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. நாளடைவில் கண்காணிப்பு கோபுரத்தை போலீசார் போதிய பராமரிப்பு செய்யவில்லை. இதனால் கோபுர தூண் அரித்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. மேலும் கண்காணிப்பு கோபுரம் ஒருபுறம் சாய்ந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வணிக நிறுவனங்களில் உள்ளவர்கள், போக்குவரத்து போலீசார் அச்சத்துடன் தான் சென்று வருகின்றனர்.

இரவு நேரங்களில் அதிக பாரத்துடன் வரும் லாரிகள், அப்பகுதியில் திரும்பும்போது கண்காணிப்பு கோபுரத்தின் மீது மோதி விடுகின்றனர். கண்காணிப்பு கோபுரம் சாய்ந்தால் உச்சிபிள்ளையார் கோயிலில் உள்ள கோபுரம் மற்றும் சிற்பங்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோயில் மூலையில் ஆபத்தான நிலையில் உள்ள போலீசார் கண்காணிக்கும் கோபுரத்தை அகற்றி அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: