×

கல்வியாளர் கருத்து குழந்தை திருமணம், செல்பேசியை தவிர்த்து மாணவிகள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்

பெரம்பலூர், பிப். 20: குழந்தை திருமணம், செல்பேசி ஆகியவற்றை தவிர்த்தல் மூலம் மாணவிகள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று குரும்பலூரில் நடந்த ஜேஆர்சி விழாவில் மாவட்ட நீதிபதி மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி பேசினார். பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவில் ஜேஆர்சியில் சிறந்து விளங்கிய ஜூனியர்கள், சிறப்பாக செயல்பட்ட கவுன்சிலர்கள் மற்றும் சிறந்த ஜேஆர்சி பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் தலைமை வகித்து சிறந்த பள்ளிகளுக்கு விருதுகளை வழங்கி மாணவர்கள் சிறந்த சேவை செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். பெரம்பலூர் மாவட்ட நீதிபதி மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி பங்கேற்று சிறந்த ஜேஆர்சி, மாணவர்கள் மற்றும் சிறந்த கவுன்சிலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கி கவுரவித்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் அவர் பேசும்போது, பள்ளிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை, பெண் குழந்தை கடத்தல், குழந்தை திருமணம், செல்பேசி ஆகியவற்றை தவிர்த்தல் மூலம் மாணவிகள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். அதற்கு இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் இலவசமாக சேவை வழங்கி வருகிறோம். அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். மாவட்ட கல்வி அலுவலர்கள் பெரம்பலூர் மாரிமீனாள், வேப்பூர் குழந்தைராஜன், பெரம்பலூர் மாவட்ட ஐஆர்சிஎஸ் செயலாளர் ஜெயராமன், பள்ளி தலைமையாசிரியர் கஜபதி முன்னிலை வகித்தனர். வேப்பூர் கல்வி மாவட்ட கன்வீனர் ராதாகிருஷ்ணன் 2019-2020 ஆண்டின் செயல்பாடுகளை விளக்கி கூறினார். பெரம்பலூர் மாவட்ட கன்வீனர் மாயக்கிருஷ்ணன், வட்டார கல்வி அலுவலர்கள் ராமதாஸ், இளங்கோவன், ஜோதிலட்சுமி, பள்ளி துணை ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பெரம்பலூர் கல்வி மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்றார். பெரம்பலூர் கல்வி மாவட்ட இணை கன்வீனர் ஜோதிவேல் நன்றி தெரிவித்தார்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது