கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தொழிலாளர் சம்மேளன கூட்டத்தில் வலியுறுத்தல்

தஞ்சை, பிப். 20: தஞ்சை அருகே மாரியம்மன் கோயிலில் இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன மாநிலக்குழு கூட்டம், பயிற்சி கூட்டமாக 2 நாட்கள் நடந்தது. சம்மேளன தலைவர் சிங்காரவேலு தலைமை வகித்தார். சிஐடியூ மாநில செயலாளர் தங்கமோகன், சம்மேளன பொது செயலாளர் குமார், மாநில துணைத்தலைவர் மாலதி சிட்டிபாபு, சுப்பையா, மாநில உதவி பொது செயலாளர்கள் ராமர், கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை மாவட்ட செயலாளர் மூர்த்தி பங்கேற்றனர். கூட்டத்தில் அன்வர் உசேன், தங்க மோகன், சிங்காரவேலு, குமார், மாலதி சிட்டிபாபு ஆகியோர் இன்றைய அரசியல் நிலை, தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னை, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள நலவாரிய திட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை ரூ.2 லட்சம், பென்சன் ரூ.3000 அறிவிக்கப்பட்ட உதவிகளுக்கு உடனே அரசாணை வெளியிட வேண்டும். தரமான எம்-சாண்ட், பி-சாண்ட் மாற்று மணலை தமிழக அரசே உற்பத்தி செய்ய வேண்டும். குறைந்த விலையில் ஆற்று மணல் வழங்க மாவட்டங்களில் குடோன் அமைத்து வழங்க வேண்டும். கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் வாரியங்களை ஒரே மாதிரியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரியத்தை மத்திய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு செல்லும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பது கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் மாதம் கட்டுமான சங்க கிளைகள் சார்பில் முதல்வருக்கு கடிதம் அனுப்புவது, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை திரட்டி சென்னையில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Related Stories: